'ஈகோமார்க்' விதிகள் திருத்தம்; கருத்து கேட்கிறது மத்திய அரசு
'ஈகோமார்க்' விதிகள் திருத்தம்; கருத்து கேட்கிறது மத்திய அரசு
ADDED : ஜூன் 20, 2026 06:22 AM

சென்னை: பெயின்ட், பேக்கேஜிங் காகிதம் ஆகியவற்றுக்கான சுற்றுச்சூழல் தர மதிப்பீடான 'ஈகோமார்க்' சான்றிதழ் விதிகளில் திருத்தம் செய்வது குறித்து, 60 நாட்களுக்குள் பொதுமக்கள் கருத்து தெரிவிக்க மத்திய அரசு அழைப்பு விடுத்து உள்ளது.
நம் நாட்டில் பொருட்கள் தயாரிக்கும் போது அதில் உரிய தரம் இருப்பதை உறுதி செய்ய பி.ஐ.எஸ்., எனும் இந்திய தர நிர்ணய ஆணையம் சான்று வழங்குகிறது. அனைத்து வகையான பொருட்களுக்கும் தரச்சான்று குறியீடுகள் வழங்கப்படுகின்றன.
இதில் குறிப்பிட்ட சில வகை பொருட்களால் சுற்றுச்சூழலுக்கு எந்த அளவுக்கு பாதிப்பு ஏற்படும் என்பதை குறிக்கும் வகையில் ஈகோமார்க் தரச்சான்று வழங்கும் நடைமுறை, கடந்த 1991ல் தொடங்கப்பட்டது.
தற்போதைய நிலவரப்படி, அழகு சாதன பொருட்கள், ஜவுளி, பெயின்ட், மருந்து பொருட்கள் உள்ளிட்ட பல பொருட்களுக்கு ஈகோமார்க் தரச்சான்று வழங்கப்படுகிறது. இந்நிலையில், கடந்த 2024ல் இதுதொடர்பான விதிகள் திருத்தப்பட்டன.
இதன்பின், தற்போது ஈகோமார்க் தரச்சான்று விதிகளை மீண்டும் திருத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
புதிய வரைவு விதிகளின்படி, பெயின்ட், பேக்கேஜிங் காகிதம், பேட்டரிகள், தீயணைப்பு சாதனங்கள், சணல் பொருட்கள் ஆகியவற்றை தயாரிக்கும்போது, சுற்றுச்சூழலை பாதிக்கும் மூலப்பொருட்களை முழுமையாக தவிர்ப்பது அல்லது குறைப்பது கட்டாயமாக்கப்படுகிறது. இதற்கான வரைவு அறிக்கையை மத்திய வனம் மற்றும் சுற்றுச்சூழல் துறை வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து 60 நாட்களுக்குள் sohsmd-mef@gov.in என்ற இ - மெயில் முகவரியில் கருத்து தெரிவிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அழகு சாதன பொருட்கள், சமையல் எண்ணெய், சோப்புகள், சலவைத்துாள், காகிதம், மின் சாதனங்கள், தேநீர், காபி, ஜவுளி, பெயின்ட், மருந்து பொருட்கள் ஆகியவற்றுக்கு ஈகோமார்க் தரச்சான்று வழங்கப்படுகிறது.
