ஆப்கனுக்கு சரக்கு விமானங்கள் மீண்டும் துவங்கும் மத்திய அரசு
ஆப்கனுக்கு சரக்கு விமானங்கள் மீண்டும் துவங்கும் மத்திய அரசு
ADDED : நவ 21, 2025 11:55 PM

புதுடில்லி: இந்தியா - ஆப்கன் இடையே மீண்டும் விமான சரக்கு போக்குவரத்து விரைவில் துவங்கப்பட இருப்பதாக, மத்திய வெளியுறவுத்துறை அமைச்சக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்தியாவுடன் வர்த்தக உறவை மேம்படுத்தும் நோக்கில், ஆப்கன் வர்த்தக அமைச்சர் அல்ஹாஜ் நுாருதீன் அஜிஜி, 5 நாள் அரசு முறைப்பயணமாக இந்தியா வந்துள்ளார். அண்டை நாடான பாகிஸ்தானுடன் மோதல் நீடித்து வரும் நிலையில், இந்தியாவுடன் குறிப்பாக வேளாண் சார்ந்த ஏற்றுமதியில் கைகோர்க்க ஆப்கன் ஆர்வம் கொண்டுள்ளது. ஆப்கனில் விளைவிக்கப்படும் பழங்கள், உலர் திராட்சை, டீ, காபி ஆகியவற்றின் ஏற்றுமதியை அதிகரிப்பதுடன், இந்தியாவில் இருந்து மருந்து பொருட்கள், இயந்திரங்கள் மற்றும் ஐவுளி இறக்குமதியை அதிகரிக்க ஆப்கன் அரசு திட்டமிட்டுள்ளது.
இந்நிலையில், வெளியுறவுத்துறை இணை செயலர் ஆனந்த் பிரகாஷ் தெரிவித்துள்ளதாவது:
மீண்டும் காபூல் - டில்லி, காபூல்- - அமிர்தசரஸ் இடையே விமான சரக்கு போக்குவரத்து பாதை செயல்படுத்தப்பட்டு உள்ளது. இந்த வழித்தடங்களில் விரைவில் சரக்கு விமானங்கள் இயக்கப்பட உள்ளன. இதன் வாயிலாக ஆப்கன் உடன் நம் வர்த்தக மற்றும் வணிக உறவு மேலும் வலுப்படும். தற்போது, இரு தரப்பு வர்த்தகத்தின் மதிப்பு 8,800 கோடி ரூபாயாக உள்ளது.
விமான சரக்கு போக்குவரத்து துவங்குவதன் வாயிலாக வர்த்தகம் கணிசமான அளவு அதிகரிக்க வாய்ப்புள்ளது. வர்த்தகம், மற்றும் முதலீடு தொடர்பாக, கூட்டு நடவடிக்கை குழுவை மீண்டும் செயல்பாட்டுக்கு கொண்டு வர உள்ளோம். இந்த குழு, இந்தியா - ஆப்கன் இடையே வர்த்தக பிணைப்பை உருவாக்கும் பாலமாக செயல்படும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.

