ADDED : பிப் 28, 2024 12:33 AM

சென்னை:சென்னை கொருக்குப்பேட்டையில் இருந்து குவஹாத்திக்கு, சர்க்குலர் பார்சல் விரைவு ரயில் சேவை நேற்று துவங்கப்பட்டது.
தெற்கு ரயில்வே, சென்னை ரயில் கோட்டம் சார்பில், முதன் முறையாக சென்னை கொருக்குப்பேட்டையில் இருந்து அசாம் மாநிலம் குவஹாத்திக்கு சர்க்குலர் பார்சல் விரைவு ரயில் சேவையை, சென்னை ரயில் கோட்ட மேலாளர் விஸ்வநாத் ஈர்யா நேற்று இரவு கொடியசைத்து துவங்கி வைத்தார்.
இது குறித்து, அதிகாரிகள் கூறியதாவது:
இந்த ரயில், அடுத்த ஆறு ஆண்டுகளுக்கு 105 கோடி ரூபாய்க்கு, தனியார் நிறுவனத்திடம் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஒரே நேரத்தில் 484 டன் பொருட்களை கொண்டு செல்ல முடியும். மாதந்தோறும் நான்கு நாட்களுக்கு, இந்த பார்சல் சரக்கு ரயில் இயக்க திட்டமிட்டுள்ளோம்.
தேவையை பொருத்து பின்னர், சேவை அதிகரிக்கப்படும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
