'மூலப்பொருட்கள் இறக்குமதி அபாய அளவில் சீன ஆதிக்கம்'
'மூலப்பொருட்கள் இறக்குமதி அபாய அளவில் சீன ஆதிக்கம்'
UPDATED : ஏப் 28, 2026 11:29 PM
ADDED : ஏப் 28, 2026 11:28 PM

புதுடில்லி:நம் நாட்டின் தொழில் துறைக்கான மூலப்பொருட்கள் தேவையை நிறைவு செய்வதில் சீனாவின் பங்கு 30 சதவீதத்திற்கும் மேல் உள்ள நிலையில், ஒரே நாட்டை அதிகம் சார்ந்து இருப்பது ஆபத்தானது என, சர்வதேச வர்த்தக ஆய்வு அமைப்பான ஜி.டி.ஆர்.ஐ., எச்சரித்து உள்ளது.
இதுகுறித்து அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
2025 - 26ம் நிதியாண்டில், இந்தியாவின் மொத்த இறக்குமதி கிட்டத்தட்ட 73.34 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. இதில், சீனாவில் இருந்து மட்டும் கிட்டத்தட்ட 12.45 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளன. மொத்த இறக்குமதியில் சீனாவின் பங்கு சுமார் 16 சதவீதமாக இருந்தாலும், தொழிலக பொருட்களில் அது 30.80 சதவீதமாக உயர்ந்துள்ளது.
முக்கிய துறைகள், சீனாவில் இருந்து வரும் மூலப்பொருட்களையே பெரிதும் சார்ந்துள்ளன.
இந்த பொருட்கள் விருப்ப அடிப்படையிலானவை அல்ல; தயாரிப்பு துறைக்கு அவசியமான முக்கிய உள்ளீடுகள் ஆகும். உற்பத்திக்கு தேவையான வினியோக தொடர் சீனாவை சார்ந்தே இருப்பதால் அபாயங்கள் நீடிக்கின்றன.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
