ADDED : பிப் 11, 2025 11:22 PM

புதுடில்லி:கடந்த சில ஆண்டுகளாக இந்தியாவில் தடை செய்யப்பட்டிருந்த நூற்றுக்கணக்கான சீன செயலிகளில், 13 செயலிகள் மீண்டும் பயன்பாட்டுக்கு வந்துள்ளன.
நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்துவதாகக் கூறி கடந்த 2020ல், 200க்கும் அதிகமான செயலிகளை மத்திய அரசு, தடை செய்தது. தற்போது இவற்றில் மொத்தம் 36 செயலிகள் மீண்டும் பயன்பாட்டுக்கு வந்துள்ளன.
இவற்றில் 13 சீன செயலிகள். பிளே ஸ்டோர் மற்றும் ஆப் ஸ்டோர்களில் இருந்து இவை நீக்கப்பட்டிருந்த நிலையில், அவற்றை தற்போது மீண்டும் பதிவிறக்கம் செய்ய முடிகிறது.
கடந்த 2020ம் ஆண்டு நடந்த கல்வான் பள்ளத்தாக்கு மோதலுக்குப் பிறகு, பல சீன செயலிகள் நீக்கப்பட்டன. இதனிடையே சமீபகாலமாக இரு நாட்டு உறவில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ள நிலையில், குறிப்பிட்ட சில செயலிகள் மீண்டும் சேர்க்கப்பட்டுள்ளன.
எனினும், திருப்பிச் சேர்க்கப்பட்டுள்ள பட்டியலில் மிகவும் பிரபலமான டிக்டாக் செயலி இல்லை.
மீண்டும் சேர்க்கப்பட்டவற்றில் ஒரு சில செயலிகள் மட்டுமே அதே பெயர்களில் தொடர்கின்றன. மற்ற செயலிகள், தங்களது பெயர் மற்றும் சின்னங்களை மாற்றியுள்ளன.

