சிறுதொழிலுக்கான பொது வசதி மையங்களில் குடும்ப ஆதிக்கத்துக்கு 'சிட்கோ' முற்றுப்புள்ளி
சிறுதொழிலுக்கான பொது வசதி மையங்களில் குடும்ப ஆதிக்கத்துக்கு 'சிட்கோ' முற்றுப்புள்ளி
ADDED : மார் 04, 2026 01:10 AM

சென்னை:தமிழகத்தில் ஒரே தொழிலில் ஈடுபட்டுள்ள பல குறுந்தொழில் நிறுவனங்கள் பயன்பெற மத்திய, மாநில அரசுகளின் நிதி உதவியில் பொது வசதி மையம் அமைக்கப்படுகிறது.
ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் மட்டும் பயன்பெறுவதை தடுக்க மையத்தை நிர்வகிக்கும் குழுவில் அரசு பிரதிநிதிகளை நியமிக்கவும், வருங்கால தொழில்நுட்பத்துக்கு ஏற்ப புதிய இயந்திரங்கள் வாங்க நிதியை சேமிக்கவும், தமிழக அரசின், 'சிட்கோ' நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது.
தமிழகத்தில் உள்ள சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் ஜவுளி, வாகன உதிரிபாகம் உட்பட பல்வேறு பொருட்களை உற்பத்தி செய்கின்றன. சிறு, குறுந்தொழில் நிறுவனங்கள் குறைந்த முதலீட்டில் செயல்படுவதால், தங்கள் தொழிலுக்கு தேவைப்படும் நவீன இயந்திரங்களை வாங்க சிரமப்படுகின்றன.
இதற்காக அந்த சேவைகளை, பெரிய நிறுவனங்களிடம் அதிக கட்டணம் செலுத்தி பயன்படுத்தி வருகின்றன.
எனவே, அந்நிறுவனங்களின் உற்பத்தித்திறன் மற்றும் போட்டித்திறனை மேம்படுத்த மத்திய அரசின் சிறு, குறுந்தொழில் குழும மேம்பாட்டு திட்டத்தின் வாயிலாக, 'சிட்கோ' எனப்படும் தமிழக சிறு தொழில் வளர்ச்சி நிறுவனம் பொது வசதி மையங்களை அமைக்க உதவுகிறது.
அதன்படி, ஒரு இடத்தில் ஒரே தொழிலில் ஈடுபட்டுள்ள பல குறுந்தொழில் நிறுவனங்கள் பயன்பெற, 30 கோடி ரூபாய் வரையிலான திட்ட செலவில் பொது வசதி மையம் அமைக்க, 70 சதவீதம் மத்திய அரசும், 20 சதவீதம் தமிழக அரசும் மானியம் வழங்குகின்றன. மீதி, 10 சதவீதத்தை, பொது வசதி மையம் உருவாக்கப்படும் குழுவில் உள்ள நிறுவனங்கள் செலவிடும்.
அங்குள்ள இயந்திரங்களை, குழுமத்தில் உள்ள நிறுவனங்கள் குறைந்த கட்டணத்தில் பயன்படுத்தலாம். இதுதவிர, மற்ற நிறுவனங்களும் கட்டணம் செலுத்தி பயன்படுத்தி கொள்ளலாம்.
ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்களே வெவ்வேறு நிறுவனங்கள் பெயரில் விண்ணப்பித்து, 90 சதவீத மானியத்தை பெற்று, பொது வசதி மையம் அமைப்பதுடன், இயந்திரங்களை பயன்படுத்த, மற்ற நிறுவனங்களை அனுமதிப்பதில்லை என்று புகார்கள் எழுந்தன.
இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், பொது வசதி மையங்களை நிர்வகிக்கும் குழுவில், அரசு அதிகாரிகள் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

