கோவை உலக புத்தொழில் மாநாடு தொழில் முனைவோருக்கு 'நெட்வொர்க்கிங்'
கோவை உலக புத்தொழில் மாநாடு தொழில் முனைவோருக்கு 'நெட்வொர்க்கிங்'
ADDED : அக் 02, 2025 11:22 PM

கோவை, : கோவை, கொடிசியா வளாகத்தில் வரும் 9, 10ம் தேதிகளில் தமிழக அரசின் 'டி.என். ஸ்டார்ட் அப்' சார்பில் நடக்கவுள்ள, உலக புத்தொழில் மாநாட்டில் தொழில் முனைவோருக்கு நெட்வொர்க்கிங் வாய்ப்பு வழங்கப்பட உள்ளது.
மாநாட்டில், கருத்தரங்குகள், சர்வதேச ஜி.சி.சி., இன்குபேஷன் மையங்களின் பிரதிநிதிகள், உலகப் புகழ்பெற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள், தலைவர்கள், அவர்களுடன் கலந்துரையாடல், புதிதாக தொழில் துவங்க மற்றும் விரிவுபடுத்த விரும்புவர்கள் ஐடியாக்களை முன்வைத்து, முதலீடுகளை ஈர்ப்பதற்கான வாய்ப்பு, யுனிகார்ன் நிறுவனங்களின் பங்கேற்பு, மத்திய - மாநில அரசுகளின் துறைகள் என, மிகப்பெரும் வாய்ப்பாக இம்மாநாடு நடத்தப்படுகிறது.
ஏ.ஐ., மேட்ச் மேக்கிங் மாநாட்டில் பங்கேற்க, இணையதளம் அல்லது டி.என்.ஜி.எஸ்.எஸ்., செயலியில் பதிவு செய்ய வேண்டும். பதிவு செய்யும் தொழில்முனைவோரின் தகவல் அடிப்படையில், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப உதவியுடன், 'ஏ.ஐ., எனேபிள்டு மேட்ச் மேக்கிங்' என்ற வசதி உருவாக்கப்பட்டு உள்ளது.
தொழில்முனைவோரது விபரங்கள் அடிப்படையில், மாநாட்டில் பங்கேற்கும் 250க்கும் மேற்பட்ட வெளிநாட்டு நிபுணர்கள், முக்கிய பேச்சாளர்கள் என அனைத்துத் தரப்பினரையும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் ஆய்வு செய்து, உங்கள் தொழிலுக்கு ஏற்ற துறை சார்ந்தவர்களை ஏ.ஐ., தொழில்நுட்பம் பரிந்துரைக்கும். அவர்களில் தமக்கு விருப்பமானவர்களைச் சந்திக்க, செயலி வாயிலாகவே கோரிக்கை விடுக்க முடியும்.
'சாட்' செய்யலாம் செயலியில், தங்களுக்குப் பொருத்தமான நபருடன் சாட் செய்யும் வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. 3,000க்கும் மேற்பட்ட சக பங்கேற்பாளர்களையும் இவ்வசதி பரிந்துரைக்கும்.
நாட்டின் வெவ்வேறு பகுதியில் இருந்து வரும் சக தொழில்முனைவோரும் இவ்வாய்ப்பை பயன்படுத்தி, சந்திக்க முடியும் என, புத்தொழில் மாநாடு ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.