UPDATED : அக் 08, 2026 12:00 AM
ADDED : அக் 07, 2026 10:44 PM
ரெப்போ வட்டி உயர்வால் சிறு, குறு மற்றும் நடுத்தர ஏற்றுமதியாளர்களின் நிதிச்சுமை அதிகரிக்கும். உலகளாவிய வர்த்தக மந்தநிலைக்கு மத்தியில், ஏற்றுமதியாளர்களின் நெருக்கடியை குறைக்க, கடனை திருப்பி செலுத்துவதற்கான காலக்கெடுவை, 270 நாட்களிலிருந்து 450 நாட்களாக ரிசர்வ் வங்கி நீட்டிக்க வேண்டும். மேலும், சர்வதேச சந்தையில், நமது போட்டித்தன்மையை தக்கவைக்க, குறைந்த வட்டி விகிதத்தில் ஏற்றுமதியாளர்களுக்கு தடையின்றி கடனுதவி கிடைப்பதையும் உறுதி செய்ய வேண்டும்.
– பியோ,
இந்திய ஏற்றுமதியாளர்கள் கூட்டமைப்பு
இந்த வட்டி உயர்வு, வீட்டு வசதி துறையில் உடனடியாக பெரிய பாதிப்பை ஏற்படுத்தாது. எனினும், நடுத்தர மற்றும் குறைந்த விலை வீடுகளை வாங்குபவர்களுக்கு இ.எம்.ஐ., சுமை அதிகரிக்க வாய்ப்புள்ளது. கட்டுமான செலவுகளும் அதிகரித்துள்ளதால், இதன் தாக்கம் வரும் காலங்களில் படிப்படியாக எதிரொலிக்கும். அதேநேரத்தில், வட்டி மாற்றங்களால் அதிகம் பாதிக்கப்படாத ஆடம்பர வீடுகளுக்கான தேவையில், இந்த உயர்வு எந்தவித தாக்கத்தையும் ஏற்படுத்தாது என எதிர்பார்க்கப்படுகிறது.
– ஜே.எல்.எல்., இந்தியா
ரியல் எஸ்டேட் சேவைகள் நிறுவனம்
பொருளாதார நிலைத்தன்மைக்கான இந்த நடவடிக்கை வரவேற்கத்தக்கது. அதே நேரத்தில், கடன் வட்டி அதிகரிப்பதால், மக்களின் நுகர்வு திறன் குறையக்கூடும். குறிப்பாக, சிறு தொழில்களின் விரிவாக்கம் மற்றும் புதிய முதலீடுகளை இது பாதிக்க வாய்ப்புள்ளது. இதன் தாக்கம் உடனடியாக அல்லாமல் படிப்படியாகவே தெரியும். ஆனால், நீண்டகால அடிப்படையில் பார்த்தால், ரிசர்வ் வங்கியின் இந்த அணுகுமுறை நாட்டின் பொருளாதார கட்டமைப்பை வலுப்படுத்தவே உதவும்.
– அசோசெம்
தொழில் கூட்டமைப்பு
