குழந்தைகள் உணவில் சர்க்கரை பயன்பாடு குறித்து ஆராய குழு
குழந்தைகள் உணவில் சர்க்கரை பயன்பாடு குறித்து ஆராய குழு
ADDED : ஆக 16, 2025 01:10 AM

புதுடில்லி: குழந்தைகளுக்கான உணவு தயாரிப்புகளில் சர்க்கரையை பயன்படுத்த அனுமதிப்பது குறித்து ஆய்வு செய்வதற்கான குழுவை, இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் அமைத்துள்ளது.
சுவிட்சர்லாந்தை தலைமையிடமாக கொண்ட 'நெஸ்லே' நிறுவனம், கடந்தாண்டு இந்தியா மற்றும் பிற வளரும் நாடுகளின் சந்தையில், விற்பனை செய்யும் 'செர்லாக்' தயாரிப்புகளில் சர்க்கரையை சேர்ப்பதும், வளர்ந்த நாடுகளில் விற்கும் இதே தயாரிப்புகளில் சர்க்கரை இன்றி விற்பதும் சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது.
இந்நிலையில் அதிகாரி ஒருவர் தெரிவித்ததாவது: இந்தியாவில் குழந்தைகளுக்கான உணவுகள் தயாரிக்கும் நிறுவனங்கள், சந்தைப்படுத்துதல் முதல் விற்பனை வரை, உரிய சட்டவிதிகளை பின்பற்றுவது கட்டாயம். இதன்படி, நிறுவனங்கள் சர்க்கரையை, சுக்ரோஸ் மற்றும் ப்ரக்டோஸ் வடிவில் மட்டும் சேர்க்க அனுமதிக்கப்படுகிறது.
மேலும், 2019ம் ஆண்டு, உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய விதிகளின்படி, தேவையான கார்போஹைட்ரேட்ஸ் இல்லாதபட்சத்தில், சுக்ரோஸ் மற்றும் ப்ரக்டோஸ் சேர்க்கக் கூடாது. மேலும், இதன் அளவானது, மொத்த கார்போஹைட்ரேட்ஸ் அளவில், 20 சதவீதத்தை தாண்டக் கூடாது என கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில், நிறுவனங்கள் குழந்தைகளுக்கான உணவு தயாரிப்புகளில் சர்க்கரையை சேர்க்க அனுமதிக்கலாமா, அவ்வாறு அனுமதிக்கும் பட்சத்தில் எந்த அளவு அனுமதிக்கலாம் என்பதை குழு மதிப்பீடு செய்யும். இருப்பினும், ஆய்வு அறிக்கையை சமர்ப்பிக்க குழுவுக்கு எந்தவொரு காலக்கெடுவும் நிர்ணயிக்கப்படவில்லை.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.