ADDED : மே 22, 2026 01:21 AM

ஜெய்பிரகாஷ் குழும பங்குகளை வாங்கும் அதானி
அ தானி பவர் நிறுவனம், ஜெய்பிரகாஷ் பவர் வெஞ்சர்ஸ் நிறுவனத்தின் 24 சதவீத பங்குகளையும், ஜெய்பிரகாஷ் அசோசியேட்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான 180 மெகாவாட் அனல்மின் நிலையம் உள்ளிட்ட சொத்துகளையும் 4,193.59 கோடி ரூபாய்க்கு கையகப்படுத்த ஒப்பந்தம் செய்துள்ளது.
இதில், ஜெய்பிரகாஷ் மின் நிறுவன பங்குகளை வாங்க, 2,993.60 கோடி ரூபாயும், அதன் அனல்மின் நிலையம் மற்றும் தொடர்புடைய சொத்துக்களுக்கு 1,200 கோடி ரூபாயும் வழங்கப்படும். தற்போது, ஜெய்பிரகாஷ் பவர் வெஞ்சர்ஸ் நிறுவனம் 2,220 மெகாவாட் திறன் கொண்ட 3 மின் நிலையங்களை இயக்கி வருகிறது.
சரக்கு கட்டண உயர்வால்ஸ்டீல் துறை பாதிப்பு
மே ற்காசிய பதற்றம் மற்றும் ரஷ்யா- உக்ரைன் மோதல் காரணமாக, உலகளாவிய சரக்குக் கட்டணம் 28- - 30 சதவீதம் வரை உயர்ந்துள்ளது.
இது இந்திய ஸ்டீல் துறைக்கு மிகப்பெரிய சவாலாக உருவெடுத்துள்ளது என்று டாடா ஸ்டீல் துணை தலைவர் சுந்தர ராமம் தெரிவித்து உள்ளார்.
தற்போது தொழில்துறையின் உள்நாட்டு செயல்பாடுகளும் மூலப்பொருள் வினியோகமும் சீராக இருந்தாலும், இக்கட்டண உயர்வு கோக்கிங் நிலக்கரியை இறக்குமதி செய்யும் ஸ்டீல் உற்பத்தியாளர்களின் சரக்கு போக்குவரத்து செலவுகளை கடுமையாக அதிகரித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
