ADDED : மே 23, 2026 01:32 AM

டால்மியா வசமாகும் 'ஜே.பி' சிமென்ட்
ஜெய்பிரகாஷ் அசோசியேட்ஸ் நிறுவனத்தின் மத்திய பிரதேசம் மற்றும் உத்தர பிரதேசத்தில் உள்ள 52 லட்சம் டன் உற்பத்தி திறன் கொண்ட சிமென்ட் ஆலைகள் மற்றும் தொடர்புடைய சொத்துகளை 2,850 கோடி ரூபாய்க்கு டால்மியா பாரத் நிறுவனம் கையகப்படுத்த உள்ளது. அதானி குழுமம் முன்னெடுத்து வரும் திவால் தீர்வு திட்டத்தின் கீழ் இந்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்படுகிறது. இதன் வாயிலாக, டால்மியா பாரத் சிமென்ட் உற்பத்தி திறன் 4.95 கோடி டன்னில் இருந்து 5.47 கோடி டன்னாக உயர உள்ளது.
ரூ.4000 கோடி நிதி திரட்டும் ஆதித்ய பிர்லா
ஆதித்ய பிர்லா கேபிட்டல் நிறுவனம் தொழில் வளர்ச்சி மற்றும் துணை நிறுவன முதலீடுகளுக்காக 4,000 கோடி ரூபாய் நிதி திரட்டுவதாக அறிவித்துள்ளது. இந்த நிதி திரட்டல் திட்டத்தின் கீழ் கிராசிம் இண்டஸ்ட்ரீஸ் 2,880 கோடி ரூபாய், சூர்யஜா இன்வெஸ்ட்மென்ட் சிங்கப்பூர் 200 கோடி ரூபாய் மற்றும் சர்வதேச நிதி கழகம் 920 கோடி ரூபாய் என முதலீடு செய்ய உள்ளன. இந்த முன்னுரிமை பங்கு வெளியீடு ஒரு பங்கிற்கு 356.02 ரூபாய் விலையில் மேற்கொள்ளப்பட உள்ளது என நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்திய நிறுவனமாகும் ஸ்விக்கி முயற்சி தோல்வி
உணவு வினியோக நிறுவனமான ஸ்விக்கி, இந்திய நிறுவனமாக மாறும் நோக்கில் அமைப்பு விதிகளில் மாற்றம் செய்ய முயன்றது. இதற்கான தீர்மானத்திற்கு 72.36 சதவீத ஆதரவு மட்டுமே கிடைத்ததால், 75 சதவீத தேவையான வாக்கு அளவை விட 2.64 சதவீதம் குறைந்து அது தோல்வியடைந்தது. அதே நேரத்தில் புதிய இயக்குனர் நியமன தீர்மானம் 98.98 சதவீத ஆதரவுடன் நிறைவேறியது. இந்த தகவலை நிறுவனம் பங்குச்சந்தை தாக்கலில் தெரிவித்துள்ளது.
பந்தன் வங்கியில் 5% பங்கு வாங்கிய எஸ்.பி.ஐ.,
எஸ்.பி.ஐ., மியூச்சுவல் பண்டு நிறுவனம் பந்தன் வங்கியில் தனது பங்கு முதலீட்டை 5 சதவீதமாக உயர்த்தியுள்ளது. மே 20 அன்று கூடுதலாக 16,98,478 பங்குகள் வாங்கப்பட்டதை தொடர்ந்து, மொத்த பங்கு இருப்பு 8,12,46,734 ஆக உயர்ந்துள்ளது. இது வங்கியின் மொத்த செலுத்தப்பட்ட பங்கு மூலதனத்தில் 5.0432 சதவீதம் ஆகும் என பந்தன் வங்கி பங்குச்சந்தையில் தாக்கல் செய்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.
