UPDATED : ஜூன் 03, 2026 02:24 AM
ADDED : ஜூன் 03, 2026 02:03 AM

மதர் டெய்ரி
சுற்றுச்சூழல் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், மண்ணில் இயற்கையாகவே மக்கிப்போகும் இந்தியாவின் முதல் பால் பாக்கெட்டை மதர் டெய்ரி நிறுவனம் அறிமுகப்படுத்தி உள்ளது. பல வருட ஆராய்ச்சிகளுக்கு பின் தயாரிக்கப்பட்ட இந்த பாக்கெட்டின் வினியோகம், உலக சுற்றுச்சூழல் தினமான ஜூன் 5ம் தேதி தொடங்குகிறது.
வேதாந்தா
அன்னிய செலாவணி விதிமீறல் புகார்கள் தொடர்பாக, தொழிலதிபர் அனில் அகர்வாலின் வேதாந்தா குழும அலுவலகங்களில் அமலாக்கத்துறை அதிரடி சோதனைகளை மேற்கொண்டுள்ளது. டில்லி, மும்பை உள்ளிட்ட பல நகரங்களில் நடத்தப்படும் இந்த சோதனைக்கு, தங்களின் முழு ஒத்துழைப்பை வழங்கி வருவதாக வேதாந்தா நிறுவனம் தெரிவித்துள்ளது.
எல்.ஐ.சி.,
எல்.ஐ.சி., ஊழியர்களை மக்கள்தொகை கணக்கெடுப்பு பணிகளில் ஈடுபடுத்த அரசுக்கு அதிகாரம் உள்ளதாக அலகாபாத் உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. எல்.ஐ.சி., ஊழியர்களை கணக்கெடுப்பாளர்களாகவும், மேற்பார்வையாளர்களாகவும் நியமித்த அரசு உயரதிகாரியின் உத்தரவு சட்டப்பூர்வமானது என்று நீதிமன்றம் தீர்ப்பில் கூறியுள்ளது.
அவாடா
அவாடா குழுமம், ராஜஸ்தானில் அமைக்க உள்ள, தேவைக்கேற்ப வினியோகிக்கக்கூடிய புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டத்திற்காக, உள்நாட்டு மற்றும் சர்வதேச வங்கிகள் வாயிலாக கிட்டத்தட்ட 9,000 கோடி ரூபாய் திரட்டியுள்ளது. நம் நாட்டில் இப்பிரிவு எரிசக்தி திட்டத்துக்காக திரட்டப்பட்ட மிகப்பெரிய நிதி இதுவாகும்.
யுனிலீவர்
ஹிந்துஸ்தான் யுனிலீவர் நிறுவனம், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப உதவியுடன் புதிய நறுமணங்களை உருவாக்குவதற்காக, மும்பையில் பிரமாண்ட ஆராய்ச்சி மையத்தை தொடங்கியுள்ளது. அமெரிக்கா மற்றும் பிரிட்டனுக்கு அடுத்தபடியாக இம்மையத்தை இந்நிறுவனம் கிட்டத்தட்ட 1,110 கோடி ரூபாய் முதலீட்டில் அமைத்து உள்ளது.
பி ளிப்கார்ட்
இந்தியாவில் நுகர்வோர் நம்பிக்கையையும், சிறு வணிகத்தையும் மேம்படுத்த அமேசான், ஸ்விக்கி, செப்டோ, மீஷோ, எடர்னல் ஆகிய இ - காமர்ஸ் நிறுவனங்கள் இணைந்து புதிய வர்த்தக கூட்டமைப்பை உருவாக்கி உள்ளன. ஆனால், இத்துறையின் முன்னணி வகிக்கும் பிளிப்கார்ட் நிறுவனம் மட்டும் இக்கூட்டமைப்பில் இடம் பெறவில்லை.
