ADDED : செப் 06, 2026 03:31 AM

வளர்ச்சியை மீட்டெடுக்க ஹெச்.யு.எல்., திட்டம்
ஹிந்துஸ்தான் யுனிலீவர் நிறுவனம், முன்னணி பிராண்டுகளில் முதலீட்டை அதிகரிக்க முடிவு செய்துள்ளது. புதிய தயாரிப்புகள் மற்றும் வினியோக கட்டமைப்பில் கவனம் செலுத்தவும் திட்டமிட்டுள்ளது. புதிய சந்தைகளில் விரிவாக்கம் செய்வதும் வளர்ச்சிக்கு உதவும் என இந்நிறுவனத்தின்நிர்வாக இயக்குநர் பிரியா நாயர் தெரிவித்துள்ளார்.
புதிய ஆலையில் உற்பத்திசி.ஜி., பவர் தொடக்கம்
சி.ஜி., பவர் அண்டு இண்டஸ்ட்ரியல் சொல்யூஷன்ஸ் நிறுவனம், மத்திய பிரதேசத்தின் செஹோர் பகுதியில் அமைத்துள்ள புதிய ஆலையில் மின் மாற்றிகள் உற்பத்தியை தொடங்கியுள்ளது. இது இந்தியாவின் மிகப்பெரிய, ஒரே இடத்தில் அமைந்துள்ள பவர் டிரான்ஸ்பார்மர் உற்பத்தி ஆலையாகும். இந்த ஆலை மாதத்திற்கு 35 மின் மாற்றிகளை தயாரிக்கும் திறன் கொண்டது.
'செயில்' உற்பத்திஆகஸ்டில் 8% உயர்வு
ஸ்டீல் அத்தாரிட்டி ஆப் இந்தியா நிறுவனத்தின் ஆகஸ்ட் மாத கச்சா ஸ்டீல் உற்பத்தி, கடந்தாண்டின் இதே மாதத்துடன் ஒப்பிடுகையில், 8 சதவீதம் உயர்ந்து 16.8 லட்சம் டன்னாகியுள்ளது. ஸ்டீல் விற்பனை 13 சதவீதம் அதிகரித்து 18.7 லட்சம் டன்னாக உயர்ந்துள்ளது. வலுவான தேவை காரணமாக உற்பத்தியிலும், விற்பனையிலும் வளர்ச்சி ஏற்பட்டுள்ளது.
12 ஆண்டுகளுக்கு பின் இந்தியா வரும் 'கேரிபோர்'
பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த சில்லரை வர்த்தக நிறுவனமான கேரிபோர், 12 ஆண்டுகளுக்கு பின் இந்திய சந்தையில் மீண்டும் களமிறங்கியுள்ளது. அடுத்த 3 - 4 ஆண்டுகளில் 50 கடைகளை அமைக்க திட்டமிட்டுள்ளது. கடைகள், ஆன்லைன் மற்றும் விரைவு வினியோகம் ஆகியவற்றை ஒருங்கிணைத்து இந்திய சந்தையில் வலுவான நிலையை அடைய இந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
ஹைதராபாதில் டி.சி.எஸ்.,அமைக்கும் ஏ.ஐ., தரவு மையம்
டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் நிறுவனத்தின் துணை நிறுவனமான ஹைப்பர்வால்ட், ஹைதராபாதில் 264 ஏக்கர் நிலத்தை பெற்று, 1 ஜிகாவாட் திறன் கொண்ட தரவு மையத்தை அமைக்கிறது. இதற்காக ஹைப்பர்வால்ட் மற்றும் அதன் கூட்டாளிகள் 70,000 கோடி ரூபாய் வரை முதலீடு செய்ய உள்ளனர். இதன் வாயிலாக ஆயிரக்கணக்கான நேரடி, மறைமுக வேலைவாய்ப்புகள் உருவாகும்.
