ADDED : செப் 09, 2026 02:51 AM

200 மெகாவாட் காற்றாலை ஆர்டர் பெற்றது சுஸ்லான்
சுஸ்லான் எனர்ஜி நிறுவனம், அயானா ரினியூவபிள் பவர் நிறுவனத்தின் 200 மெகாவாட் மின் திட்டத்துக்கான காற்றாலை ஜெனரேட்டர்களை வழங்குவதற்கான ஆர்டரை பெற்றுள்ளது. மத்திய பிரதேசம் மற்றும் ஆந்திர பிரதேசத்தில் செயல்படுத்தப்பட உள்ள இந்த திட்டம், திட்ட விரிவாக்க நிறுவனங்கள் வாயிலாக சுஸ்லானுக்கு கிடைத்த மூன்றாவது காற்றாலை ஆர்டராகும்.
பெங்களூரில் ரூ.185 கோடியில் ஹெச்.சி.எல்., ஆய்வகம்
ஹெச்.சி.எல்., டெக்னாலஜிஸ் நிறுவனம், பெங்களூரில் 185 கோடி ரூபாய் முதலீட்டில் செமிகண்டக்டர் ஆய்வகத்தை தொடங்கியுள்ளது. சிப் வடிவமைப்பு மற்றும் சோதனை உள்ளிட்ட பணிகளுக்கு இந்த ஆய்வகம் பயன்படுத்தப்படும். உலகளாவிய செமிகண்டக்டர் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கான ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு பணிகளிலும் இந்தஆய்வகம் கவனம் செலுத்தும்.
ஒடிஷா ஏ.ஐ., திட்டத்துக்கு டி.சி.எஸ்., உடன் ஒப்பந்தம்
ஒடிஷா அரசின் டிஜிட்டல் நிர்வாக தளத்தின் அடுத்த கட்டமான 'ஓஸ்வாஸ் 3.0' திட்டத்தை செயல்படுத்தும் பணியை, டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் நிறுவனம் 122.6 கோடி ரூபாய்க்கு பெற்றுள்ளது. ஏ.ஐ., தொழில்நுட்பத்தின் அடிப்படையில் இயங்கும் இத்தளம், அரசு சேவைகளை ஒருங்கிணைத்து வழங்க உதவும். இந்த ஒப்பந்தம், இரு தரப்பு உறவை விரிவுபடுத்தியுள்ளது.
சாம்சங் பணியாளர்கள் 100 பேர் பணி நீக்கம்
சாம்சங் இந்தியா நிறுவனத்தின் தொலைக்காட்சி மற்றும் வீட்டு உபயோக பொருட்கள் பிரிவில், 100க்கும் மேற்பட்ட பணியாளர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பல்வேறு நிர்வாக நிலைகளில் பணியாற்றியவர்கள் இதனால் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. செலவு குறைப்பு நடவடிக்கைகளில் ஒரு பகுதியாக இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
322 மெ.வாட் சோலார் திட்டங்கள் மஹாராஷ்டிராவில் தொடக்கம்
டோரன்ட் பவர் நிறுவனத்தின் துணை நிறுவனமான டோரன்ட் கிரீன் எனர்ஜி, மஹாராஷ்டிராவில் 322 மெகாவாட் திறன் கொண்ட, சூரிய மின் திட்டங்களை செயல்பாட்டுக்கு கொண்டு வந்துள்ளது. சூரிய விவசாய வாகினி திட்டத்தின் கீழ், விவசாய மின் தேவையை புதுப்பிக்கத்தக்க எரிசக்தி வாயிலாக பூர்த்தி செய்யவும், பசுமை மின் திறனை அதிகரிக்கவும் இது உதவும்.
