ADDED : நவ 29, 2026 04:03 AM

எத்தனாலில் இயங்கும் மஹிந்திரா டிராக்டர்
மஹிந்திரா டிராக்டர்ஸ் நிறுவனம், எத்தனால் கலந்த பெட்ரோலில் இயங்கும் டிராக்டரை அறிமுகப்படுத்தியுள்ளது.
நாக்பூரில் நடைபெற்று வரும் 'அக்ரோவிஷன் 2026' கண்காட்சியில், காட்சிப்படுத்தப்பட்ட இந்த டிராக்டர் 49 ஹெச்.பி., திறன் கொண்டது. கரும்பு, மக்காச்சோளம், விவசாய கழிவுகளில் இருந்து தயாரிக்கப்படும் எத்தனால் கொண்டு இந்த டிராக்டரை இயக்க முடியும். டீசல் டிராக்டருக்கு இணையாக இது செயல்படும் என மஹிந்திரா நிறுவனம் தெரிவித்துள்ளது.
சார்ஜிங் கட்டமைப்புக்கு ஹோண்டா கூட்டணி
மின்சார வாகனங்களுக்கான சார்ஜிங் கட்டமைப்பை நாடு முழுதும் விரிவுபடுத்தும் வகையில், 'ஹோண்டா கார்ஸ் இந்தியா' நிறுவனம், ஐந்து நிறுவனங்களுடன் கூட்டணி அமைத்துள்ளது. இதன்படி, அதானி டோட்டல் எனர்ஜீஸ் இ-மொபிலிட்டி, ஜியோ-பி.பி., டாடா பவர், ஜி.ஓ.இ.சி., மற்றும் எலெக்ட்ரீபை ஆகிய நிறுவனங்களுடன் இணைந்து சார்ஜிங் வசதிகளை உருவாக்க உள்ளது. மின்சார கார் பயன்பாட்டை ஊக்குவிப்பதற்கான ஒருங்கிணைந்த சார்ஜிங் கட்டமைப்பை உருவாக்குவது இதன் நோக்கமாகும். ஹோண்டாவின் முதல் மின்சார காரான 'ஆல்பா இ.வி.,' வரும் டிசம்பர் 2ம் தேதி அறிமுகமாக உள்ளது.
உச்ச நீதிமன்றத்தில் 'டாடா சன்ஸ்' கேவியட் மனு
டாடா டிரஸ்ட்கள் மேல்முறையீடு செய்தால், தங்கள் தரப்பு வாதத்தையும் கேட்க வேண்டும் என்பதற்காக, டாடா சன்ஸ் நிறுவனம் மும்பை உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றத்தில் கேவியட் மனுக்களை தாக்கல் செய்துள்ளது. டாடா சன்ஸ் தலைவராக சந்திரசேகரன் மூன்றாவது முறையாக மறுநியமனம் செய்யப்பட்டதை எதிர்த்து, சர் தோரப்ஜி டாடா டிரஸ்ட், ஆர்.டி. டாடா டிரஸ்ட் ஆகியவை வழக்கு தொடர்ந்துள்ளன. நவம்பர் 30ம் தேதி நடைபெற உள்ள இயக்குநர் குழு கூட்டத்தை ஒத்திவைக்க கோரின. ஆனால், கூட்டத்தை ஒத்திவைக்க உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது.
ஐ.ஜி.ஐ., நிறுவன பங்குகள்'பிளாக்ஸ்டோன்' விற்பனை
பிளாக்ஸ்டோன் நிறுவனம், தன்வசம் இருந்த ஐ.ஜி.ஐ., எனும் இன்டர்நேஷனல் ஜெமலாஜிக்கல் இன்ஸ்டிடியூட் நிறுவனத்தின் 1.55 சதவீத பங்குகளை, 280 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்துள்ளது. தேசிய பங்கு சந்தையில் நடைபெற்ற பரிவர்த்தனை வாயிலாக, 67.16 லட்சம் பங்குகள், தலா 417 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டுள்ளன. இதையடுத்து, ஐ.ஜி.ஐ., நிறுவனத்தில் பிளாக்ஸ்டோனின் பங்கு இருப்பு 76.55 சதவீதத்தில் இருந்து 75 சதவீதமாக குறைந்துள்ளது.
