தொழில் நிறுவனங்களுக்கு சலுகை; மாசு கட்டுப்பாட்டு வாரியம் உத்தரவு
தொழில் நிறுவனங்களுக்கு சலுகை; மாசு கட்டுப்பாட்டு வாரியம் உத்தரவு
ADDED : ஆக 21, 2026 07:02 AM

சென்னை: 'தொழில் நிறுவனங்கள் ஆலைகளை தொடர்ந்து இயக்க, சுற்றுச்சூழல் அனுமதியை தொகுப்பு முறையில், 14 ஆண்டுகள் வரை ஒரே முறையில் புதுப்பிக்கலாம்' என மாசு கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்துள்ளது.
தொழிற்சாலைகள் தொடங்க வேண்டும் என்றால், அதற்கு முறையாக விண்ணப்பித்து சுற்றுச்சூழல் அனுமதி பெற வேண்டும். இந்த அனுமதி அடிப்படையில் ஆலைகளை இயக்குவதற்கான அனுமதியை மாசு கட்டுப்பாட்டு வாரியம் வழங்குகிறது.
தற்போதைய நிலவரப்படி, ஓரிரு ஆண்டுகளுக்கு மட்டுமே இந்த அனுமதி வழங்கப்படுகிறது. அனுமதி காலம் முடியும் நிலையில் தொழில் நிறுவனங்கள் மீண்டும் கட்டணம் செலுத்தி புதுப்பிக்க வேண்டும்.
இதில் ஏற்படும் நடைமுறை சிக்கல்கள் காரணமாக தொகுப்பு முறையில் அதிக ஆண்டுகளுக்கு செல்லும் வகையில் அனுமதி அளிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது.
இது தொடர்பாக தமிழக மாசு கட்டுப்பாட்டு வாரியம் வெளியிட்ட அறிவிப்பு:
தொழில் நிறுவனங்கள், சுற்றுச்சூழல் அனுமதி அடிப்படையிலான ஆலை இயக்க அனுமதியை, ஐந்து, 10, 14 ஆண்டுகள் அடிப்படையில் ஒரே தவணையில் கட்டணம் செலுத்தி புதுப்பித்து கொள்ளலாம்.
சிவப்பு, ஆரஞ்சு, பச்சை வகை பட்டியலில் இடம்பெற்றுள்ள தொழில்களுக்கு மட்டுமே இது பொருந்தும். இதனால், புதுப்பித்தலுக்கு விண்ணப்பித்து காத்திருப்பது தவிர்க்கப்படும்.
ஒரே நேரத்தில் அதிக ஆண்டுகளுக்கு அனுமதி கிடைப்பதால், விதிமீறல்கள் தவிர்க்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
