இந்திய ரியல் எஸ்டேட் துறையில் நிறுவன முதலீடுகள் 11 சதவிகிதம் உயர்வு
இந்திய ரியல் எஸ்டேட் துறையில் நிறுவன முதலீடுகள் 11 சதவிகிதம் உயர்வு
UPDATED : அக் 08, 2025 01:25 AM
ADDED : அக் 08, 2025 01:23 AM

புதுடில்லி:கடந்த ஜூலை - செப்டம்பர் காலாண்டில், நாட்டின் ரியல் எஸ்டேட் துறையில் நிறுவன முதலீடுகள் 11 சதவீதம் உயர்ந்து, 11,176 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளதாக கோலியர்ஸ் இந்தியா நிறுவனத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்தாண்டு இதே காலகட்டத்துடன் ஒப்பிடுகையில், உள்நாட்டு நிறுவன முதலீட்டாளர்களின் முதலீடு 51 சதவீதம் அதிகரித்துள்ள நிலையில், அன்னிய நிறுவன முதலீட்டாளர்களின் முதலீடு 21 சதவீதம் சரிந்துள்ளது.
பெரும் பணக்காரர்களின் குடும்ப அலுவலகங்கள், வெளிநாட்டு கார்ப்பரேட் குழுமங்கள், வெளிநாட்டு வங்கிகள், ஓய்வூதிய பண்டுகள், ரியல் எஸ்டேட் பண்டுகள், வெளிநாட்டு நிதியுதவி பெரும் வங்கி சாரா நிதி நிறுவனங்கள் உள்ளிட்டவை நிறுவன முதலீட்டாளர்கள் என்ற வகைப்பாட்டின் கீழ் வருகின்றன.
அன்னிய முதலீட்டாளர்கள் எச்சரிக்கை உணர்வோடு இருந்தாலும், இந்திய ரியல் எஸ்டேட் துறையில் நிறுவன முதலீடுகள் தொடர்ந்து அதிகரிக்கும் என, அறிக்கையில் நம்பிக்கை தெரிவிக்கப்பட்டுள்ளது.
வருமான வரி உச்சவரம்பு உயர்வு, ஜி.எஸ்.டி., குறைப்பு, கடன் வட்டி விகிதம் குறைவு ஆகியவை இதற்கு வழிவகுக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.