UPDATED : ஜூலை 14, 2025 09:03 AM
ADDED : ஜூலை 13, 2025 10:51 PM

ரஷ்யா - உக்ரைன்; இஸ்ரேல் - ஹமாஸ்; இஸ்ரேல் - ஈரான் - அமெரிக்கா, என நீளும் போர்களால், அந்நாடுகள் மட்டும் பாதிக்கப்படவில்லை; அமைதி மேகம் தவழும் இந்தியாவின் டார்ஜிலிங் தேயிலை வணிகமும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
ரஷ்யாவின் மாஸ்கோவில் இருந்து, இத்தாலியின் மிலன் வரை, அதாவது மேற்காசியா, ஐரோப்பிய நாடுகளின் விருப்ப பானமான டார்ஜிலிங் தேநீர், தற்போது அவர்களின் வழக்கத்தை மாற்றியிருக்கிறது. டார்ஜிலிங் தேயிலையை அதிகம் விரும்பி இறக்குமதி செய்யும் ரஷ்யாவிடம் இருந்து ஆர்டர்கள் குறைந்து விட்டன. ஈரானும் இதே நிலைதான்.
ஐரோப்பிய நாடுகளில் போர் பதற்றம் ஏதுமில்லாவிட்டாலும், பொருளாதார பதற்றமாக, மந்தநிலை நீடிக்கிறது. இதனால், தேயிலைக்கு தேவை குறைந்து, இத்தாலி உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளிடம் இருந்து ஆர்டர்கள் பெருமளவு குறைந்து விட்டன.
நழுவிய ஆர்டர்
இதன் விளைவாக, பனிப்போர்வையுடன் மேகங்கள் சூழ்ந்த அழகிய டார்ஜிலிங்கின் கிடங்குகளில், தேயிலை தேக்கம் அடைந்து கிடக்கிறது. நாள்பட்ட தேக்கத்தால் தனக்குரிய தனி மணத்தை டார்ஜிலிங் தேயிலை இழந்து வருகிறது. இதனால், ஏற்றுமதிக்கான பேச்சுகளில், ஐரோப்பிய வணிகர்கள் விலையை பாதியாகக் குறைத்து கேட்கும் நிலை. ஏற்க மறுத்தால், ஆர்டர்களை ரத்து செய்கின்றனர்.
ரஷ்யாதான் டார்ஜிலிங் தேயிலையின் மிகப்பெரிய வாடிக்கையாளர், அதன் ஆர்டர் இல்லாவிட்டால், தேயிலையை கடலில் போட வேண்டியதுதான் என ஆவேசம் கலந்த கவலையை வெளியிடுகிறார், இந்திய தேயிலை ஏற்றுமதியாளர்கள் சங்கத்தின் தலைவர் அன்ஷுமான் கனோரியா.
தங்கள் பேச்சுகளுக்கு பிறகும் ஏகப்பட்ட ஆர்டர்கள் கைநழுவிப் போனது, அவரது கம்மிய குரலில் தெரிந்தது. போரால் உருவான வினியோகத் தொடர் பாதிப்பாலும், தேயிலை ஆர்டர்கள் குறைந்தன. பெற்ற ஆர்டர்களின் போக்குவரத்து தடைபட்டதால், ஆர்டர் ரத்து, சரக்கு திருப்பி அனுப்புதல் என டார்ஜிலிங் கிடங்குகளில் தேயிலை குவிவது குறைந்தபாடில்லை.
போர்களால் ஆர்டர்கள் மீது பணத்தை நிறுத்தி வைத்த நாடுகளால், ஏற்றுமதியாளர்கள் பணமுடைக்கு ஆளாகினர். நாடுகளுக்கிடையேயான போர் ஒரு புறம் என்றால், கடந்த குளிர் காலத்தில் வறட்சி, அதைத் தொடர்ந்து, கணிக்க முடியாத பருவம் தவறிய மழை என, இயற்கை தொடுத்த இன்னொரு போரால், தேயிலை முதிர்ச்சி அடைவதற்கு முன்பே கருகி, சுருண்டு போயின.
“எங்கள் தேயிலை அதன் அழுத்தமான முத்திரையை இழந்து நிற்கிறது என்று மனம் குமுறுகிறார், டார்ஜிலிங் தேயிலை சங்கத்தின் முதன்மை ஆலோசகர் சந்தீப் முகர்ஜி. புயல் அடிக்கும்போது கவிதை எழுத முயற்சிப்பது போல இருக்கிறது எங்கள் நிலை என்றார் அவர்.
மேற்காசிய போர், ஐரோப்பிய பொருளாதார மந்தநிலை, இயற்கையின் சீற்றம் ஆகியவற்றுடன் எதிர்நீச்சல் போட்டு வரும், டார்ஜிலிங் தேயிலை தொழிலுக்கு இன்னொரு பக்கத்திலிருந்து பதம் பார்க்க வந்தவை தான், மற்ற நாடுகளின் தேயிலை போட்டி. சோதனையிட்டு கட்டுப்படுத்தப்படாத, நேபாள தேயிலை மேற்கு வங்க தேயிலை சந்தையில் குவிக்கப்படுகிறது.
பரிதாபம்
சர்வதேச தேயிலை ஏலத்தில் பங்கேற்கும் இவை, டார்ஜிலிங் தேயிலை போன்ற வடிவம், அதே வாசனை என்று கூறிய கனோரியா, தரத்தில் குறைவான மாற்று தேயிலைகளாலும் டார்ஜிலிங் தேயிலை ஏற்றுமதியும் ஏலமும் பாதிக்கப்படுகிறது என்றார்.
தேயிலை பறிக்கும் தொழிலாளர்களின் நிலையோ பரிதாபம். கடுங்குளிரில், ஈரமான தேயிலையை பறிப்பதும், வெயில் நேரத்தில் ரசாயனம் தெளிப்பதும் ஏற்படுத்தும் காயங்களுக்கு அரிசி வேகவைத்த கஞ்சியில் சிகிச்சை எடுப்பதாக கூறுகிறார், வர்ஷா சேத்ரி என்ற தேயிலை தோட்ட தொழிலாளி.
கையுறைகள் வாங்கவோ, கிளினிக் சென்று சிகிச்சை பெறவோ வசதியற்றவர்கள் என தன் ஆதங்கத்தை வெளிப்படுத்தினார் ரூபா. போனஸ் என்பது பழங்கதை, சில நேரம் மதிய உணவு கூட இல்லாமல் வீடு திரும்புவதாக கூறினார் அவர்.
உதவ வேண்டும்
டார்ஜிலிங் தேயிலைக்கு மரியாதை வழங்கும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் தான் தற்போது இந்திய ஏற்றுமதியாளர்களின் ஒரே புகலிடம். அங்கு ஏற்றுமதியை அதிகரிக்க வழிதேடி விளம்பர நிகழ்வுகள் நடத்தப்படுகிறது.
ஆபத்தில் உள்ள டார்ஜிலிங் தேயிலை தொழிலை பாதுகாக்க அரசு தலையிட வேண்டும்; குறைந்தபட்ச ஆதரவு விலை, புவிசார் குறியீடு, எல்லா பருவங்களையும் தாங்கும் சாகுபடி ஆகியவற்றுக்கு உதவ வேண்டும் என்பதே இவர்களது கோரிக்கை.
“லாபம் ஈட்டுவதற்காக போராடவில்லை, டார்ஜிலிங் தேயிலையின் கவுரவத்தைக் காக்கவே போராடுகிறோம்” என்கிறார், சிறிய தேயிலை தோட்ட சங்கத்தின் இணை நிறுவனர் அனிந்த்யா சென்குப்தா. நாட்டின் ஆன்மாவின் ஒரு பகுதியாக இருக்கும் டார்ஜிலிங் தேயிலையின் அரிய நறுமணம் காக்கப்பட வேண்டும் என்பதே அனைவரது விருப்பமாக இருக்கிறது.