UPDATED : ஜன 07, 2026 11:13 AM
ADDED : ஜன 07, 2026 01:05 AM

புதுடில்லி: இந்தியாவில் கார் விற்பனை கடந்த டிசம்பர் மாதத்தில் 27 சதவீதம் அதிகரித்துள்ளதாக, வாகன முகவர்கள் சங்கங்களின் கூட்டமைப்பான 'படா' தெரிவித்துள்ளது. நகரங்களை பின்னுக்கு தள்ளி கிராமங்களில் கார்களின் தேவை அதிகரித்து, விற்பனை உயர்ந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
'படா' தரவுகளின்படி, டிசம்பர் மாதத்தில் மட்டும் 3.80 லட்சம் கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. கிராமப்புறங்களில் விற்பனை 32.40 சதவீதமும், நகர்ப்புறங்களில் 22.93 சதவீதமும் வளர்ச்சி கண்டுள்ளது. இது, முக்கிய நகரங்களை தாண்டியும் தனிநபர் வாகன பயன்பாடு அதிகரித்துள்ளதை உணர்த்துவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, கடந்தாண்டு முழுதும் மொத்த கார் விற்பனை 9.70 சதவீதம் உயர்ந்து, 44.75 லட்சமாக இருந்தது என தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்தாண்டில் ஜனவரி முதல் ஆகஸ்ட் மாதம் வரை விற்பனை மந்தமாக இருந்ததாகவும்; செப்டம்பரில் ஜி.எஸ்.டி., குறைக்கப்பட்டதால், வாகனங்களின் விலை குறைந்து, நுகர்வோர் மத்தியில் ஆர்வம் அதிகரித்ததும், பண்டிகை காலமும் இந் த வளர்ச்சிக்கு முக்கிய காரணமாக கூறப்படுகிறது.

