உயிர் காக்கும் பொருட்களுக்கு ஜி.எஸ்.டி., குறைக்க கோரிக்கை
உயிர் காக்கும் பொருட்களுக்கு ஜி.எஸ்.டி., குறைக்க கோரிக்கை
UPDATED : மே 27, 2026 11:52 PM
ADDED : மே 27, 2026 11:15 PM

புதுடில்லி: ஹெல்மெட், ஆம்புலன்ஸ் மற்றும் அத்தியாவசிய மருத்துவ உபகரணங்கள் மீதான ஜி.எஸ்.டி.,யை குறைக்க கோரிக்கை எழுந்துள்ளது.
தற்போது, இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு கட்டாய பாதுகாப்பு சாதனமாக உள்ள ஹெல்மெட்டுக்கு, 18 சதவீத ஜி.எஸ்.டி., விதிக்கப்படுகிறது.
அதேபோல், ஆம்புலன்ஸ் வாகனங்கள், ஆக்சிஜன் செறிவூட்டிகள், மருத்துவ கண்காணிப்பு கருவிகள், வீல்சேர் மற்றும் உடல் உள் பொருத்து சாதனங்கள் உள்ளிட்ட அத்தியாவசிய மருத்துவ உபகரணங்களுக்கும், 5 சதவீதம் முதல் 18 சதவீதம் வரை, ஜி.எஸ்.டி., வசூலிக்கப்படுகிறது.
இந்த வரி விதிப்பு காரணமாக, உயிர் பாதுகாப்பு மற்றும் அவசர மருத்துவ தேவைகளுக்கான பொருட்களின் விலை உயர்வதாக சுட்டிக்காட்டப்படுகிறது. குறிப்பாக, ஆம்புலன்ஸ் வாகனங்கள் மற்றும் மருத்துவ உபகரணங்களின் விலை உயர்வால், மருத்துவமனைகள் மற்றும் அவசர சிகிச்சை சேவைகளின் செலவும் அதிகரிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
![]() |
கோரிக்கை
இந்நிலையில், ஹெல்மெட், ஆம்புலன்ஸ் மற்றும் அத்தியாவசிய மருத்துவ உபகரணங்கள் மீதான ஜி.எஸ்.டி.,யை குறைக்க அல்லது முழுமையாக விலக்கு அளிக்க வேண்டும் என, மத்திய அரசை சர்வதேச சாலை பாதுகாப்பு கூட்டமைப்பான ஐ.ஆர்.எப்., வலியுறுத்தி உள்ளது.
பிரதமர் மோடி மற்றும் ஜி.எஸ்.டி., கவுன்சிலுக்கு எழுதப்பட்ட கடிதத்தில், இந்த வரிகளை குறைத்தால், பொதுமக்களுக்கு குறைந்த விலையில் கிடைப்பதுடன், சாலை பாதுகாப்பு மற்றும் அவசர மருத்துவ சேவைகளும் மேம்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

