வினியோகம் பாதிக்காமல் இருக்க டீசல் ஏற்றுமதி வரி அதிகரிப்பு
வினியோகம் பாதிக்காமல் இருக்க டீசல் ஏற்றுமதி வரி அதிகரிப்பு
UPDATED : ஜூன் 17, 2026 03:09 AM
ADDED : ஜூன் 17, 2026 03:08 AM

புதுடில்லி: உள்நாட்டு எரி பொருள் வினியோகம் பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்யும் வகையில், டீசல் மற்றும் விமான எரிபொருள் (ஏ.டி.எப்.,) ஏற்றுமதிக்கான 'விண்ட்பால்' வரியை மத்திய அரசு உயர்த்தி உள்ளது.
இதன்படி, டீசல் ஏற்றுமதிக்கு விதிக்கப்படும் சிறப்பு கூடுதல் கலால் வரி லிட்டருக்கு 13.50 ரூபாயில் இருந்து 14 ரூபாயாக உயர்த்தப்பட்டு உள்ளது.
விமான எரிபொருளான ஏ.டி.எப்., ஏற்றுமதிக்கான வரி லிட்டருக்கு 9.50 ரூபாயில் இருந்து 12.50 ரூபாயாக உயர்த்தப்பட்டு உள்ளது. பெட்ரோல் ஏற்றுமதிக்கான வரியில் மாற்றமில்லை; அது லிட்டருக்கு 1.50 ரூபாயாகவே தொடர்கிறது. அதே நேரத்தில், உள்நாட்டு பயன்பாட்டுக்கான பெட்ரோல் மற்றும் டீசல் வரிகளில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.
சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை உயர்வால், நிறுவனங்களுக்கு கிடைக்கும் அசாதாரண லாபத்தின் மீது விதிக்கப்படும் சிறப்பு வரியே 'விண்ட்பால்' வரி. ஏற்றுமதி லாபத்தை கட்டுப்படுத்தி, உள்நாட்டு எரிபொருள் வினியோகம் பாதிக்கப்படாமல் இருக்க இந்த வரி விதிக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
