பதப்படுத்திய இறைச்சி ஏற்றுமதி ஊக்குவிக்கும் டி.என்.எபெக்ஸ்
பதப்படுத்திய இறைச்சி ஏற்றுமதி ஊக்குவிக்கும் டி.என்.எபெக்ஸ்
ADDED : மார் 18, 2025 10:27 PM

சென்னை:உலகளவில் பதப்படுத்தப்பட்ட இறைச்சிக்கு அதிக சந்தை வாய்ப்புள்ளதால், அதன் ஏற்றுமதியை அதிகரிக்கும் வகையில், அந்த தொழிலில் ஈடுபட்டுள்ள சிறு தொழில் நிறுவனங்களை, டி.என்.எபெக்ஸ் ஊக்குவிக்க முடிவு செய்துள்ளது.
தமிழகத்தில் உணவு பதப்படுத்தும் தொழிலில் முதலீட்டை ஈர்ப்பது, வேளாண் சார்ந்த மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் ஏற்றுமதியை ஊக்குவிப்பது உள்ளிட்ட பணிகளை, சிறு, குறு, நடுத்தர தொழில் துறையின் கீழ் செயல்படும் டி.என்.எபெக்ஸ் எனப்படும் உணவு பதப்படுத்துதல் மற்றும் வேளாண் ஏற்றுமதி மேம்பாட்டு கழகம் மேற்கொள்கிறது. இந்நிறுவனம், வெளிநாடுகளுக்கு பதப்படுத்தப்பட்ட இறைச்சி ஏற்றுமதியை அதிகரிக்கும் வகையில், தொழில் நிறுவனங்களை ஊக்குவிக்க உள்ளது.
இதுகுறித்து அதிகாரி ஒருவர் கூறியதாவது:
உலகில் இறைச்சி ஏற்றுமதியில் பிரேசில், அர்ஜென்டினா, நியூசிலாந்து நாடுகள் முன்னணியில் உள்ளன. முதல் 10 இடங்களில் இந்தியாவும் உள்ளது. பிரேசில், அர்ஜென்டினா நாடுகள், மற்ற நாடுகளில் இருந்து இறைச்சியை வாங்கி பதப்படுத்தி, ஏற்றுமதி செய்கின்றன. இந்தியா மலேசியா, ஐக்கிய அரபு நாடுகளுக்கு அதிகளவில் இறைச்சியை ஏற்றுமதி செய்கிறது.
டி.என்.எபெக்ஸ் வாயிலாக ஆண்டுக்கு, 100 தொழில்முனைவோருக்கு உணவு பதப்படுத்தும் தொழில் பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.