
நிதி குழு காலக்கெடு நீட்டிப்பு
மத்திய அரசு, 16வது நிதி குழுவின் காலக்கெடுவை வரும் நவம்பர் 30ம் தேதி வரை ஒரு மாதம் நீட்டித்துள்ளது. நிடி ஆயோக் முன்னாள் தலைவர் அரவிந்த் பனகாரியா தலைமையில் நான்கு பேர் கொண்ட 16வது நிதி குழு கடந்த 2023 டிசம்பர் 31ல் அமைக்கப்பட்டது. மத்திய, மாநில அரசுகளுக்கிடையே வரி பகிர்வு குறித்த பரிந்துரைகளை இந்த குழு வழங்கும். இதை அடிப்படையாகக் கொண்டே 2026 ஏப்ரல் முதல் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு வரி பகிர்வு நடைபெறும். இந்த குழு வரும் 30ம் தேதிக்கு முன்னதாக அரசிடம் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். இந்நிலையில் காலக்கெடுவை ஒரு மாதம் நீட்டிப்பதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
பிரமால் பைனான்ஸ் விலக முடிவு?
ஸ்ரீராம் ஜெனரல் லைப் இன்சூரன்ஸ் நிறுவனத்தில் தனக்குள்ள மொத்த பங்குகளையும் விற்று வெளியேற, பிரமால் பைனான்ஸ் நிறுவனம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கே.கே.ஆர் நிறுவனமும் தன் பங்குகளை விற்று வெளியேற உள்ளதாக கூறப்படுகிறது. கடந்த மார்ச் மாத நிலவரப்படி, ஸ்ரீராம் ஜெனரல் லைப் இன்சூரன்சில் இரு நிறுவனங்களும் முறையே 13.33 சதவீதம் மற்றும் 9.99 சதவீத பங்குகள் வைத்துள்ளன. ஸ்ரீராம் நிறுவனத்தை பட்டியலிட திட்டமிடப்பட்டுள்ளதாகவும், இதற்கு மற்ற பங்குதாரர்கள் ஒப்புக்கொள்ளாதபட்சத்தில், வேறு வாய்ப்புகள் ஆராயப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.
எழும்பூரில் 195 ரூம் ஹில்டன் ஹோட்டல்
சென்னை எழும்பூரில் 195 ரூம் ஹோட்டல் அமைக்க உள்ளதாக ஹில்டன் நிறுவனம் அறிவித்துள்ளது. எம்.ஜி.எம்., ஹெல்த்கேர் குழுமத்தைச் சேர்த்த எம்.கே.ஆர்., எஸ்டேட் டெவலப்பர்ஸ் நிறுவனத்துடன் இணைந்து இந்த ஹோட்டலை அமைக்க உள்ளது. இதற்கான ஒப்பந்தம் நேற்று கையெழுத்தானது. வரும் 2029 ஜனவரி மாதத்தில் ஹோட்டலை திறக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும், இதில் வணிக அலுவலக வளாகம் இடம்பெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வணிக மற்றும் ஓய்வெடுக்க விரும்பும் பயணிகளுக்கு சென்னை ஒரு முக்கிய சந்தை என்றும், இந்த ஹோட்டலை அமைப்பதன் வாயிலாக தென் மாநிலங்களில் தங்களின் இருப்பை வலுப்படுத்த உள்ளதாகவும் ஹில்டன் நிறுவனம் தெரிவித்துள்ளது.