சென்னை விமான நிலையத்தில் புதிய சரக்கு முனையம் அமைக்க முயற்சி
சென்னை விமான நிலையத்தில் புதிய சரக்கு முனையம் அமைக்க முயற்சி
ADDED : நவ 29, 2025 12:13 AM

சென்னை : சென்னை விமான நிலைய இயக்குநர் அலுவலகத்தில் விமான நிலைய மேம்பாட்டு பணிகள் குறித்த ஆய்வு கூட்டம் நேற்று நடந்தது.
இதில் சென்னை விமான நிலைய இயக்குநர் ராஜா கிஷோர், எம்.எல்.ஏ.,க்கள் எஸ்.ஆர்.ராஜா, கருணாநிதி, பரங்கிமலை மாவட்ட போலீஸ் துணை கமிஷனர் ஸ்ரீனிவாசன் உள்ளிட்ட மத்திய - மாநில அமைப்புகளை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர். சென்னை விமான நிலைய ஆலோசனை குழு தலைவர் எம்.பி. பாலு கூறியதாவது:
சென்னை விமான நிலையத்தில் இருந்து தற்போது கிளாம்பாக்கம், சிறுசேரி ஆகிய பகுதிகளுக்கு மாநகர பேருந்துகள் இயக்கப்படுகின்றன. மேலும், பல பகுதிகளுக்கு பேருந்துகளை விமான நிலையத்தில் இருந்து இயக்குவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன.
சென்னை, மீனம்பாக்கம் விமான நிலையத்தில் இருந்து, கிளாம்பாக்கம் வரை, மெட்ரோ ரயில் வர உள்ளது. அதற்கான பணிகளை தமிழக அரசு வேகமாக செய்து வருகிறது. சென்னை விமான நிலையத்தில் சரக்கு போக்குவரத்தை மேம்படுத்தவும், தற்போது உள்ள குடோன்களின் எண்ணிக்கையை அடுத்தாண்டுக்குள் உயர்த்தி, புதிய சரக்கு முனையம் அமைக்கவும் ஆலோசிக்கப் படுகிறது.
இதற்கான இட வசதிகளை மேம்படுத்தவும் கட்டடங்கள் கட்டவும் ஆய்வு திட்டப் பணிகள் விரைவில் துவங்க உள்ளன.
இவ்வாறு அவர் கூறினார்.

