மின்னணு பொருட்கள் ஏற்றுமதி பத்து ஆண்டுகளில் 8 மடங்கு உயர்வு மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தகவல்
மின்னணு பொருட்கள் ஏற்றுமதி பத்து ஆண்டுகளில் 8 மடங்கு உயர்வு மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தகவல்
ADDED : டிச 28, 2025 01:02 AM

புதுடில்லி: கடந்த நிதியாண்டில் மின்னணு பொருட்கள் உற்பத்தி, 11.30 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.
அதேபோல, ஏற்றுமதியும் 3.30 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளதாக, மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.
எக்ஸ் தளத்தில் அவர் தெரிவித்துள்ளதாவது:
கடந்த 2014- - 15ல் நாட்டின் மின்னணு பொருட்கள் உற்பத்தி 1.9 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது. அவற்றின் ஏற்றுமதி 0.38 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது. கடந்தாண்டில் உற்பத்தி 6 மடங்கும், ஏற்றுமதி 8 மடங்கும் அதிகரித்துள்ளது. கடந்த 11 ஆண்டுகளில் இவ்வளர்ச்சி சாத்தியமாகியுள்ளது.
பெரிய அளவு மின்னணு உற்பத்தி துறைக்கான உற்பத்தியுடன் கூடிய ஊக்கத்தொகை திட்டம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
அதன் எதிரொலியாக 13,475 கோடி ரூபாய் அளவுக்கு இத்துறையில் முதலீடு கிடைத்துள்ளது. மேலும் 9.80 லட்சம் கோடி அளவுக்கு உற்பத்தியும் எட்டப்பட்டு விட்டது.
கடந்த 10 ஆண்டுகளில் மின்னணு பொருள் உற்பத்தி துறை 25 லட்சம் வேலைவாய்ப்புகளை உருவாக்கியுள்ளது.
அடிமட்ட அளவில் பொருளாதார வளர்ச்சி என்பதற்கு இதுதான் சிறப்பான எடுத்துக்காட்டு எனலாம். செமிகண்டக்டர் மற்றும் இதர சாதன உற்பத்தியை நாம் ஊக்குவித்து வரும் நிலையில் வேலைவாய்ப்புகள் இன்னும் அதிகரிக்கும்.
மின்னணு பொருள் உற்பத்தி துறையில் கடந்த 5 ஆண்டுகளில் 1.3 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாகியுள்ளன. ஏற்றுமதியை பொறுத்தவரை மின்னணு பொருட்கள் 7 ஆவது இடத்திலிருந்து முன்னேறி 3வது இடத்தை பிடித்திருக்கின்றன.
உலகில் மொபைல் போன் உற்பத்தியில் உலகின் இரண்டாவது பெரிய நாடு இந்தியா. மொபைல் போன் உற்பத்தி நிறுவனங்களின் எண்ணிக்கை 2014ல் இரண்டு மட்டுமே.
தற்போது அது 300 ஆக உயர்ந்து உள்ளது. நாட்டில் விற்பனையாகும் மொபைல் போன்களில் 99.2 சதவீதம், இந்தியாவில் தயாரிக்கப்பட்டவை.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
மின்னணு உதிரிபாக உற்பத்தி திட்டத்தின் கீழ் 1.15 லட்சம் கோடி ரூபாய் முதலீடும், 1.42 லட்சம் வேலைவாய்ப்புகளும் கிடைத்துள்ளன
10 செமி கண்டக்டர் நிறுவனங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டதில், மூன்று நிறுவனங்கள் சோதனை அடிப்படையில் உற்பத்தியை துவங்கின.

