உற்பத்தி சார் ஊக்குவிப்பு திட்டம் முதலிடத்தில் எலக்ட்ரானிக்ஸ்
உற்பத்தி சார் ஊக்குவிப்பு திட்டம் முதலிடத்தில் எலக்ட்ரானிக்ஸ்
ADDED : ஜன 18, 2026 01:14 AM

புதுடில்லி : மத்திய அரசின் பி.எல்.ஐ., எனப்படும் உற்பத்தி சார் ஊக்குவிப்பு திட்டத்தின் கீழ் சிறப்பாக செயல்பட்ட துறைகளில் எலக்ட்ரானிக்ஸ் பொருள்கள் தயாரிப்பு முன்னிலை வகிக்கிறது.
இதுகுறித்து துறை மதிப்பீட்டு நிறுவனமான 'கேர்எட்ஜ் ரேட்டிங்' வெளியிட்ட அறிக்கை:
அரசின் பி.எல்.ஐ., திட்டத்தின் கீழ் மிகச்சிறந்த செயல் திறன் கொண்ட துறையாக எலக்ட்ரானிக்ஸ் பொருள் தயாரிப்பு துறை திகழ்கிறது.
அதிலும் குறிப்பாக, மொபைல் போன் தயாரிப்பில் இந்த துறை சிறப்பாக செயல்பட்டுள்ளது. கடந்த நான்கு ஆண்டுகளில் மட்டும் இந்த துறையின் தயாரிப்பு 146 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளது.
2020 - -21ம் நிதியாண்டில் 2.13 லட்சம் கோடியாக இருந்த இத்துறையின் உற்பத்தி, கடந்த 2024 - -25ம் நிதியாண்டில் 5.45 கோடியாக அதிகரித்துள்ளது.
இந்தியாவுக்கு கிடைத்த 400 கோடி டாலர் அன்னிய நேரடி முதலீடு இந்த வளர்ச்சியை சாத்தியமாக்கியுள்ளது. இந்த முதலீட்டில் கிட்டத்தட்ட 70 சதவீதம் பி.எல்.ஐ., திட்டத்தின் கீழ் செயல்படும் துறைகளுக்கு வழங்கப்பட்டது.
எனினும், இத்திட்டத்தின் கீழ் 14 துறைகளுக்கு ரூ.1.97 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது.
அதில் 12 சதவீதம் மட்டுமே, அதாவது 23,946 கோடி ரூபாய் மட்டுமே வழங்கப்பட்டுள்ளது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

