ADDED : பிப் 23, 2024 12:01 AM
மும்பை: அன்னிய செலாவணி விதி மீறல் தொடர்பாக மும்பை ரியல் எஸ்டேட் நிறுவனமான ஹிராநந்தானி குழுமத்தின் அலுவலகம் மற்றும் பிற இடங்களில் அமலாக்கத்துறையினர் சோதனை மேற்கொண்டனர்.
அன்னிய செலாவணி விதி மீறல் குற்றச்சாட்டின் காரணமாக, மும்பையை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் முன்னணி ரியல் எஸ்டேட் நிறுவனமான ஹிராநந்தானி குழுமத்தின் மும்பை தலைமை அலுவலகம் மற்றும் அக்குழுமத்திற்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறையினர் சோதனையில் ஈடுபட்டனர்.
முன்னதாக, கடந்த 2022 மார்சில், வருமான வரித்துறையினர், மும்பை, பெங்களூரு மற்றும் சென்னை ஆகிய மூன்று நகரங்களில் உள்ள ஹிராநந்தானி குழுமத்திற்கு சொந்தமான 25 இடங்களில் சோதனை நடத்தியது. வரி ஏய்ப்பு குற்றச்சாட்டின் பேரில் அப்போது இந்த சோதனைகள் நடத்தப்பட்டன.
சோதனையின் போது, ஹிராநந்தானி குழுமத்தின் ஆவணங்கள், நிதி தொடர்பான மின்னணு பதிவுகள் மற்றும் விற்பனை பரிவர்த்தனைகள் குறித்த ஆவணங்களை அதிகாரிகள் ஸ்கேன் செய்தனர்.
இந்நடவடிக்கை, திரிணாமுல் காங்., தலைவர் மஹூவா மொய்த்ராவுடன் தொடர்புடையது அல்ல என்று அமலாக்கத்துறை தன் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
தொழிலதிபர் தர்ஷன் ஹிராநந்தானியின் துாண்டுதலின் பேரில், அதானி குழுமம் மற்றும் பிரதமர் மோடியை குறி வைத்து லோக்சபாவில் கேள்விகள் கேட்டதாக மொய்த்ரா மீது பா.ஜ., - எம்.பி., நிஷிகாந்த் துபே குற்றம்சாட்டியிருந்தார். ஹிராநந்தானி குழுமத்தின் இணை நிறுவனரும், நிர்வாக இயக்குனருமான நிரஞ்சன் ஹிராநந்தானியின் மகன் தர்ஷன் என்பது குறிப்பிடத்தக்கது.