ADDED : நவ 19, 2024 11:55 PM

சென்னை:தமிழகத்தில் சிறு தொழில் நிறுவனங்கள் பயன்பெறுவதற்கு, பொது வசதி மையம் அமைக்க, அதிக நிதி ஒதுக்கீடு செய்யுமாறு, மத்திய நிதிக் குழுவிடம், தொழில்முனைவோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மத்திய, மாநில அரசுகள் இடையே, நிதிப் பகிர்வு தொடர்பாக ஆய்வு செய்து பரிந்துரை வழங்க, மத்திய அரசின், 16வது நிதிக் குழு தமிழகம் வந்துள்ளது. இக்குழுவினரை, தமிழக சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் துறையினர் நேற்று முன்தினம் சந்தித்து, பல்வேறு கோரிக்கைகளை வைத்துள்ளனர்.
இதுகுறித்து, தமிழக சிறு மற்றும் குறுந்தொழில்கள் சங்க தலைவர் மோகன் கூறியதாவது:
தொழிற்பேட்டைகளில் ஒரே பொருளை உற்பத்தி செய்யும் பல நிறுவனங்கள் பயன்பெறுவதற்காக, இயந்திர, தளவாடங்களுடன் கூடிய பொது வசதி மையங்களும், திறன் மேம்பாட்டு மையங்களும் அமைக்க, தமிழக அரசுக்கு அதிக நிதி ஒதுக்குமாறு, குழுவினரிடம் வலியுறுத்தப்பட்டது.
சிறு நிறுவனங்களுக்கு நிலம் வாங்கி, ஆலை கட்டுமான பணிகளை மேற்கொள்ள அதிக முதலீடு தேவைப்படுகிறது. எனவே, விரைவாக தொழில் துவங்கும் வகையில், 'பிளக் அண்டு பிளே' எனப்படும், தயார் நிலை தொழிற்கூடங்களை அமைக்க நிதி ஒதுக்குமாறும் தெரிவிக்கப்பட்டது.
சிறு தொழில் நிறுவனங்களுக்காக பல்வேறு திட்டங்கள் உள்ளன. ஆனால், நிதி ஒதுக்கீடு குறைவாக உள்ளது. எனவே, சிறு தொழில் நிறுவனங்கள் பயன்பெற அதிக நிதி ஒதுக்கீடு செய்யுமாறும் வலியுறுத்தப்பட்டது.
இவ்வாறு அவர் கூறினார்.

