ADDED : ஏப் 11, 2026 11:06 PM

புதுடில்லி: பெட்ரோலில் எத்தனால் கலக்கும் திட்டம் பெரும் வெற்றி அடைந்துள்ள நிலையில், அடுத்தக்கட்டமாக டீசல் ஜெனரேட்டர்களிலும் எத்தனாலை பயன்படுத்துவது அவசியம் என்று ஜி.இ.எம்.ஏ., எனும் தானிய எத்தனால் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் துணை தலைவர் பிரசாந்த் ஜெய்ஸ்வால் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது:
இந்தியாவின் தற்போதைய எத்தனால் உற்பத்தி திறன் ஆண்டுக்கு 1,800 கோடி லிட்டராக உள்ளது. பெட்ரோலில் கலக்கப்படுவதை தாண்டி, இந்த உற்பத்தியை முழுமையாக பயன்படுத்த புதிய தேவைகளை உருவாக்க வேண்டியது கட்டாயமாகிறது.
'டெலிகாம் டவர்'கள், மருத்துவமனைகள், வணிக வளாகங்கள் மற்றும் தொழிற்சாலைகளில் பரவலாக பயன்படுத்தப்படும் டீசல் ஜெனரேட்டர்களை எத்தனால் பயன்பாட்டிற்கு மாற்றுவதன் வாயிலாக, ஆண்டுக்கு கூடுதலாக 1,300 முதல் 2,000 கோடி லிட்டர் எத்தனால் தேவை உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆரம்ப கட்டமாக, தற்போதுள்ள டீசல் ஜெனரேட்டர்களில் சிறிய மாற்றங்களை செய்து, எத்தனால் மற்றும் டீசல் இரண்டையும் பயன்படுத்தும் முறைக்கு மாறலாம். இதன் பின், மத்திய அரசின் 'மேக் இன் இந்தியா' திட்டத்தின் கீழ் 100 சதவீத எத்தனால் ஜெனரேட்டர்களை உள்நாட்டிலேயே தயாரிக்கலாம்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
