'அதீத ஒழுங்குமுறை கட்டுப்பாடுகள் நாட்டின் வளர்ச்சியை தடுத்துவிடும்'
'அதீத ஒழுங்குமுறை கட்டுப்பாடுகள் நாட்டின் வளர்ச்சியை தடுத்துவிடும்'
ADDED : மார் 06, 2024 01:34 AM

புதுடில்லி:மிகவும் அதிகளவிலான ஒழுங்குமுறை கட்டுப்பாடுகள், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி பயணத்துக்கு தடையாக அமையும் என்று 'கோட்டக் மஹிந்திரா வங்கி'யின் நிறுவனர் உதய் கோட்டக் தெரிவித்துள்ளார்.
மேலும், கட்டுப்பாட்டு அமைப்புகள் பழமைவாதத்துடன் கூடிய எச்சரிக்கை உணர்வோடு மட்டுமே செயல்படாமல், அந்தந்த துறைகளில் ஏற்படும் சிக்கல்களுக்கு விரைவாக தீர்வு காணவும் முன்வர வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
நம்பிக்கை
இதுகுறித்து அவர் மேலும் தெரிவித்ததாவது:
இந்தியாவின் எதிர்காலம் குறித்து நான் மிகவும் நம்பிக்கையோடு உள்ளேன். அதே நேரத்தில், எந்த கட்டுப்பாடுமின்றி; வாய்ப்புகள் மீது மட்டுமே கவனம் கொண்டிருப்பதும்; மிக அதிகமான கட்டுப்பாடுகளை கொண்டிருப்பதும், வளர்ச்சியடைந்த நாடு என்ற இடத்திற்கு நம்மை அழைத்துச் செல்லாது என்பதிலும் உறுதியாக உள்ளேன்.
அடுத்த 20 முதல் 25 ஆண்டுகளுக்கு, 7.50 முதல் 8 சதவீத வளர்ச்சியை அடைய, நாட்டில் குறிப்பிடத்தக்க அளவில் திறன் மேம்பாடு அவசியம்.
வளர்ச்சியடைந்த நாடு என்ற இலக்கை அடைய, கனவு காணும் உணர்வு, மற்றும் படைப்பாற்றல் மிக்க தொழில் முனைவோர்கள் தேவை. மேலும் வல்லுனர்கள், பயமின்றி சவால்களை சந்திக்க தயாராக இருக்க வேண்டும்.
வேகமாக வளர்ந்து வரும் பொருளாதாரங்களில், சவால்கள் உருவாவது இயல்பு தான். அதற்கு, வளர்ச்சியை தடை செய்வது தீர்வாகாது. எப்போதும் தயார் நிலையில் இருப்பதன் வாயிலாகவே, இந்த பிரச்னைகளை தீர்க்க முடியும்.
உடனடி தீர்வு
நாட்டின் பொருளாதாரத்துக்கு எந்த பாதிப்பும் ஏற்படாமல் தடுப்பதற்கு, இன்னும் சிறப்பான ஒழுங்குமுறைகள் தேவை. ஏதேனும் பிரச்னைகள் எழுந்தால், அதனை உடனடியாக தீர்ப்பதற்கான வழிமுறைகள் ஏற்படுத்தப்பட வேண்டும்.
இந்தியா, சேமிக்கும் நாடு என்ற நிலையிலிருந்து மாறி, தற்போது முதலீடு செய்யும் நாடு என்ற நிலையை அடைந்துள்ளது.
தற்போது, அதிகப்படியான மக்கள் மியூச்சுவல் பண்டுகளிலும், பங்குச் சந்தைகளிலும் முதலீடு செய்யத் துவங்கியுள்ளனர்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

