ADDED : செப் 21, 2026 04:05 AM

புதுடில்லி: நடப்பு நிதியாண்டின் ஏப்.,-ஆக., காலகட்டத்தில் பிரிக்ஸ் நாடுகளான சீனா, தென்னாப்பிரிக்கா, பிரேசில் மற்றும் ரஷ்யாவுக்கான இந்தியாவின் ஏற்றுமதி 34 சதவீதம் உயர்ந்து கிட்டத்தட்ட 1.89 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்து உள்ளது.
மத்திய வர்த்தக அமைச்சகம் வெளியிட்ட தரவுகளின்படி, நான்கு முக்கிய பிரிக்ஸ் நாடுகளுக்கான ஏற்றுமதி 34 சதவீதம் வளர்ச்சி அடைந்து, 2025-26 ஏப்ரல்--, ஆகஸ்ட் காலத்தில் 1.41 லட்சம் கோடி ரூபாயிலிருந்து 2026 - 27 ஏப்ரல், ஆகஸ்ட் காலத்தில் 1.89 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.
இந்தியாவின் மொத்த ஏற்றுமதியில், இந்த நான்கு நாடுகளின் பங்கு 2025- - 26 ஆண்டின் முதல் ஐந்து மாதங்களில் 8.1 சதவீதத்திலிருந்து இந்த நிதியாண்டின் முதல் ஐந்து மாதங்களில் 9.2 சதவீதமாக அதிகரித்துள்ளது.
மேலும், பிரிக்ஸ் நாடுகளில், உலக பொருளாதாரத்தில் சீனா மிகப்பெரிய பங்களிப்பாளராக உருவெடுத்துள்ளது.
நடப்பு 2026- - 27ம் நிதியாண்டின் முதல் ஐந்து மாதங்களில் இந்திய ஏற்றுமதி 39 சதவீதம் விரிவடைந்து கிட்டத்தட்ட 91,200 கோடி ரூபாயை எட்டியுள்ளது.
அதே நேரத்தில், தென்னாப்பிரிக்கா மிக வேகமான வளர்ச்சி விகிதத்தை இந்த ஐந்து மாதங்களில் பதிவு செய்துள்ளது.
இந்த காலத்தில் தென்னாப்ரிக்காவின் ஏற்றுமதி கிட்டத்தட்ட 58 சதவீதம் உயர்ந்துள்ளது. பிரேசில் மற்றும் ரஷ்யாவும் முறையே 13 சதவீதம் மற்றும் 11 சதவீதம் என்ற இரட்டை இலக்க வளர்ச்சியைத் தக்கவைத்துள்ளன.
இது குறித்து கருத்து தெரிவித்த வணிக அமைச்சக அதிகாரி ஒருவர், “முக்கிய பிரிக்ஸ் நாடுகளுக்கான ஏற்றுமதி, மொத்த பிரிக்ஸ் குழுவுக்கான ஏற்றுமதியை விட கிட்டத்தட்ட மூன்று மடங்கு வேகமாக வளர்ந்து வருகிறது. எனவே, இந்த சந்தைகள் நமது ஏற்றுமதி உத்தியின் முக்கிய துாணாக உருவெடுத்து வருகின்றன” என்று தெரிவித்தார்.
