தொடர்ச்சியாக 7வது மாதமாக சீனாவுக்கு ஏற்றுமதி அதிகரிப்பு
தொடர்ச்சியாக 7வது மாதமாக சீனாவுக்கு ஏற்றுமதி அதிகரிப்பு
ADDED : நவ 22, 2025 11:30 PM

புதுடில்லி: நடப்பு நிதியாண்டில் சீனாவுக்கு சரக்கு ஏற்றுமதி, தொடர்ச்சியாக ஏழாவது மாதமாக வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. இதில், அதிகபட்சமாக, கடந்த அக்டோபரில் ஏற்றுமதி 42 சதவீதம் அதிகரித்து உள்ளது.
நம் அண்டை நாடான சீனாவுக்கு, கடந்த ஏப்ரல் முதல் அக்டோபர் வரையிலான காலத்தில், முந்தைய ஆண்டோடு ஒப்பிடுகையில், ஏற்றுமதி 24.7 சதவீதம் அதிகரித்து, 88,000 கோடி ரூபாய் அளவுக்கு நடைபெற்றுள்ளது.
இந்தியாவில் இருந்து பெட்ரோலிய பொருட்கள், தொலை தொடர்பு கருவிகள் மற்றும் மீன்வளப் பொருட்கள் அதிகளவில் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. எனினும், மொத்த சரக்கு ஏற்றுமதி, 0.63 சதவீதம் அளவுக்கு சிறிய ஏற்றம் மட்டுமே கண்டுள்ளது.
அதே சமயம், சீனாவின் நான்காவது முக்கிய இறக்குமதி நாடாக இந்தியா தொடர்கிறது. ஏப்ரல் - அக்டோபர் வரையிலான முதல் ஏழு மாதங்களில், சீனாவில் இருந்து இந்தியாவுக்கு 6.51 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான சரக்குகள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளன. இதனால், நம் வர்த்தக பற்றாக்குறை 5.63 லட்சம் கோடி ரூபாயாக நீடிக்கிறது.

