டில்லியில் முதல் முறையாக ' இந்தியா ஏ.ஐ.,' மாநாடு
டில்லியில் முதல் முறையாக ' இந்தியா ஏ.ஐ.,' மாநாடு
ADDED : டிச 20, 2025 01:14 AM

சென்னை:'இந்தியா ஏ.ஐ., இம்பேக்ட்' மாநாட்டின் ஆலோசனை கூட்ட நிகழ்ச்சி சென்னையில் நேற்று நடந்தது. இதில், சென்னை ஐ.ஐ.டி., மற்றும் எஸ்.டி.பி.ஐ., எனும் இந்திய மென்பொருள் தொழில்நுட்ப பூங்கா நிறுவனம் இடையே, 'சக்தி டேட்டாபேஸ்' மென்பொருளுக்கான ஒப்பந்தம் கையெழுத்தானது.
இதில், மத்திய தொழில்நுட்ப துறை செயலர் கிருஷ்ணன் பேசியதாவது:
அடுத்தாண்டு பிப்ரவரி மாதம் 16ம் தேதி முதல் 20ம் தேதி வரை, செயற்கை நுண்ணறிவு மாநாடு மற்றும் கண்காட்சி டில்லியில் நடக்க உள்ளது. இந்தியா ஏ.ஐ., தொழில்நுட்ப வளர்ச்சியில் செய்து வரும் திட்டங்கள் அதன் எதிர்கால தாக்கங்கள் குறித்து மாநாட்டில் விவரிக்கப்பட உள்ளது.
ஐ.ஐ.டி., போன்ற கல்வி நிறுவனங்கள் இந்தியாவில் செயற்கை நுண்ணறிவு ஆராய்ச்சி மற்றும் திறன் வளர்ச்சியில் முக்கிய பங்காற்றுகின்றன. வங்கி மற்றும் நிதிசார் துறைகளில் ஏ.ஐ., முக்கிய பங்காற்றி வருகிறது. குறிப்பாக, பாதுகாப்பு மேலாண்மை மற்றும் வாடிக்கையாளர் சேவையை மேம்படுத்துவதற்கு உதவுகிறது.
ஸ்டான்போர்டு குறியீட்டின்படி, திறமை மற்றும் ஆராய்ச்சியில் இந்தியா உலகின் முன்னணி நாடுகளில் ஒன்றாக உள்ளது. ஏ.ஐ., மாதிரிகள் நம் நாட்டுக்கு ஏற்ப, உற்பத்தி பயன்பாடு, வேலைவாய்ப்பு உருவாக்கம் மற்றும் மறுபயிற்சி மீது கவனம் செலுத்தி வருகின்றன. மொழி, கலாசார தேவைகளுக்காக சொந்த ஏ.ஐ., மாதிரிகளை உருவாக்குவதில் கவனம் செலுத்தப்படுகிறது.
இவ்வாறு அவர் பேசினார்.
