UPDATED : டிச 15, 2025 03:26 AM
ADDED : டிச 15, 2025 03:25 AM

கவரட்டி: மீன்வளத் துறையில் முதலீட்டை ஊக்குவிப்பதற்காக, யூனியன் பிரதேசமான லட்சத்தீவில் முதல்முறையாக முதலீட்டாளர்கள் மாநாடு நேற்று முன்தினம் நடைபெற்றது.
மத்திய அரசின் மீன்வளம், கால்நடை பராமரிப்புத் துறை, லட்சத்தீவு நிர்வாகத்துடன் இணைந்து நடத்திய இந்த மாநாட்டில், நாடு முழுதும் இருந்து 22 முக்கிய முதலீட்டாளர்கள் பங்கேற்றனர்.
மேலும், 200க்கும் மேற்பட்டோர் நேரடியாகவும், ஆன்லைன் வாயிலாகவும் பங்கேற்றனர். இதில், கிட்டத்தட்ட 519 கோடி ரூபாய் அளவுக்கு முதலீடுகள் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதில் பங்கேற்ற மத்திய அமைச்சர் ராஜீவ் ரஞ்சன் சிங் தெரிவித்ததாவது:
லட்சத்தீவு சிறப்பு பொருளாதார மண்டலத்துக்கான மீன்பிடி விதிகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. இனி அங்கீகரிக்கப்பட்ட அனுமதிச் சீட்டு வாயிலாக சட்டப்பூர்வமாக மீன்பிடிக்க முடியும்.
சர்வதேச சந்தைகளில் அதிக தேவையுள்ள டியூனா மீன் மற்றும் பிற உயர் மதிப்புமிக்க மீன் பொருட்களை மீனவர்கள் எளிதாக ஏற்றுமதி செய்ய முடியும். சர்வதேச சட்டத்தின்படி, இந்திய பகுதியில் கிடைக்கும் மீன்கள் இனி இந்தியாவைப் பூர்வீகமாகக் கொண்டவை என அங்கீகரிக்கப்படும்.
இது, சர்வதேச சந்தைகளுக்கு மீன் பொருட்களை ஏற்றுமதி செய்வதை எளிதாக்குவதோடு, இந்திய மீன்களின் மதிப்பை உயர்த்தும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.

