ADDED : ஏப் 20, 2025 12:52 AM

சென்னை:புவிசார் குறியீடு பெறுவதற்கான மானியம் 25,000 ரூபாயிலிருந்து, ஒரு லட்சம் ரூபாயாக அதிகரிக்கப் படும் என, முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார்.
காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்துாரில், குறு, சிறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை சார்பில் நேற்று நடந்த நிகழ்ச்சியில், கலைஞர் கைவினைத் திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைத்து பேசியதாவது:
அறிவுசார் சொத்துரிமையான, 'புவிசார் குறியீடு' பெறுவதற்காக வழங்கப்பட்டு வரும் மானியம், 25,000 ரூபாயில் இருந்து, ஒரு லட்சம் ரூபாயாக அதிகரிக்கப்படும். அம்பத்துார் தொழிற்பேட்டையில், ஐந்து கோடி ரூபாயில், அளவியல் மற்றும் உலோகவியல் ஆய்வகங்கள் அமைக்கப்படும்.
காஞ்சிபுரம், பழந்தண்டலத்தில், ஐந்து கோடி ரூபாயில், சாலை கட்டமைப்பு மற்றும் மழைநீர் வடிகால் அமைக்க உட்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்படும்.
காக்களூர் உற்பத்தியாளர்கள் தொழிற்பேட்டையில், 3.90 கோடி ரூபாயில் பொது வசதி மையம் ஏற்படுத்தப்படும். குறு, சிறு தொழில் நிறுவனங்கள், உள்நாட்டில் வர்த்தக கண்காட்சிகள், நிகழ்வுகளில் பங்கேற்க வழங்கப்படும் காட்சிக்கூட கட்டணத்துக்கான நிதி உதவி, இரண்டு லட்சம் ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும்.
இவ்வாறு அவர் பேசினார்.

