ADDED : மே 15, 2026 12:31 AM

கோவை: “பருத்தி இறக்குமதி வரியை குறைக்க மத்திய அரசு பரிசீலனை செய்து வருகிறது; விரைவில் இதற்கான தீர்வுகள் வரும்,” என, மத்திய ஜவுளி ஆணையர் விருந்தா மனோகர் தேசாய் கூறினார்.
கோவையில் அவர் நேற்று ஜவுளித் துறையினரை சந்தித்து குறைகளை கேட்டறிந்தார்.
அப்போது தென்னிந்திய மில்கள் சங்க தலைவர் துரை பழனிசாமி பேசுகையில், “அடுத்த ஐந்து ஆண்டுகளில் ஜவுளித்தொழில் வர்த்தகத்தை சர்வதேச அளவில் 3.5 லட்சம் கோடியாக உயர்த்த அரசு நிர்ணயித்துள்ளதை வரவேற்கிறோம்.
பல்வேறு நாடுகளில் தடையில்லா வர்த்தக ஒப்பந்தங்களை அரசு மேற்கொண்டு வருவதால், இந்த இலக்கு எளிதாக எட்டப்படும் என நம்புகிறோம். பருத்தி விலை கடந்த ஒன்றரை மாதங்களாக உயர்ந்து வருகிறது.
பருத்தி விளைச்சல் 291 லட்சம் பேல்களாக உள்ளது. ஆனால், 328 லட்சம் பேல்கள் தேவை உள்ளது. எனவே, பருத்தி மீதான 11% இறக்குமதி வரியை ரத்து செய்ய வேண்டும்.
“இந்திய பருத்திக் கழகம் சிறு நுாற்பாலைகளுக்கும் மில்களுக்கும் பருத்தியை நேரடியாக வழங்க வேண்டும். ஜவுளி மேம்பாட்டு தொழில்நுட்ப நிதி போன்ற திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்த வேண்டும்,” என்றார்.
இதையடுத்து, மத்திய ஜவுளி ஆணையர் ர் விருந்தா மனோகர் தேசாய் பேசுகையில், “பருத்தி மீதான இறக்குமதி வரியை ரத்து செய்வது குறித்து மத்திய அரசிடம் வலியுறுத்தி உள்ளோம். பரிசீலனை செய்து இன்னும் ஓரிரு மாதங்களில் அரசு முடிவினை அறிவிக்கும்,” என்றார்.
இந்நிகழ்ச்சியில், தமிழ்நாடு ஜவுளி ஆணையர் லலிதா, சைமா துணைத்தலைவர் குமார் துரைராஜ், இந்திய ஜவுளித்தொழில் கூட்டமைப்பின் தலைவர் அஸ்வின் சந்தர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
