அலுமினிய கேன் தர கட்டுப்பாடு காலக்கெடுவை நீட்டித்தது அரசு
அலுமினிய கேன் தர கட்டுப்பாடு காலக்கெடுவை நீட்டித்தது அரசு
ADDED : ஜன 26, 2026 02:28 AM

புதுடில்லி: உணவு பதப்படுத்துதல் மற்றும் குளிர்பானங்கள் தயாரிப்பு துறையில் பயன்படுத்தப்படும் அலுமினிய கேன்களுக்கான கட்டாய தரக்கட்டுப்பாட்டு விதிமுறைகளை, அமல்படுத்துவதற்கான காலக்கெடுவை மத்திய அரசு நீட்டித்துள்ளது.
பி.ஐ.எஸ்., எனும் இந்தி ய தர நிர்ணய அமைப்பு, அலுமினிய கேன்களுக்கு தரச்சான்று பெறுவதை கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் முதல் கட்டாயமாக்கியது.
இந்நிலையில், சந்தையில் கேன்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டதால், இந்த காலக்கெடு தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளது.
பெரிய நிறுவனங்களுக்கு நடப்பாண்டு அக்டோபர் முதலும், சிறு நிறுவனங்களுக்கு அடுத்த ஆண்டு ஜனவரி முதலும், குறு நிறுவனங்களுக்கு அடுத்தாண்டு ஏப்ரல் முதலும் புதிய தரக்கட்டுப்பாட்டு விதிகள் அமலுக்கு வரும்.
கோடைக்காலம் நெருங்கி வருவதால், குளிர்பானங்கள் மற்றும் பீர் வகைகளுக்கான தேவை சந்தையில் அதிகரிக்கும். ஆனால், உள்நாட்டில் அலுமினிய கேன் உற்பத்தி திறன் குறைவாக உள்ளதாலும், இந்திய தர நிர்ணய அமைப்பின் புதிய விதிகளால் வெளிநாடுகளிலிருந்து கேன்களை இறக்குமதி செய்வதில் சிக்கல் இருப்பதாலும், கடும் தட்டுப்பாடு ஏற்படும் சூழல் நிலவியது.
இதை கருத்தில்கொண்டு அரசு காலக்கெடுவை நீட்டித்துள்ளது.
