ஆன்லைன் கேம்ஸ் விதிமீறல் அரசின் வரைவு விதிகள் வெளியீடு
ஆன்லைன் கேம்ஸ் விதிமீறல் அரசின் வரைவு விதிகள் வெளியீடு
ADDED : அக் 04, 2025 01:05 AM

புதுடில்லி:பணத்தை வைத்து விளையாடும் ஆன்லைன் கேம்ஸ் தடைக்கான விதிமுறையை மீறுவோருக்கு தண்டனையை கடுமையாக்கும் வகையில், வரைவு விதிகளை உருவாக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
ஆன்லைன் கேம் முறைப்படுத்தும் சட்டம் 2025ன் கீழ் குற்றம் செய்பவர்களுக்கு, ஜாமினில் வெளிவர இயலாத நிலை புதிய விதிமுறையில் இடம்பெற்றுள்ளது. மேலும், விதிமீறல் உறுதி செய்யப்பட்டால், ஆன்லைன் கேம் நிறுவனத்தின் ஒட்டுமொத்த ஊழியர்களும் தான் பொறுப்பாவர்.
அங்கீகரிக்கப்பட்ட அதிகாரிகள், இந்த விதிமுறையின்படி, எந்த இடத்திலும், நேரடியாக சோதனையிடவும் சந்தேகத்துக்குரியவரை வாரன்ட் இல்லாமல் கைது செய்யவும் அதிகாரம் வழங்கப்படுகிறது.
பணம் வைத்து விளையாடும் ஆன்லைன் சூதாட்டத்தை வழங்குவது, உதவி செய்வது, ஊக்கமளிப்பது, விளையாடுவது ஆகியவற்றை இந்த மாதிரி விதிமுறைகளின் ஐந்தாவது பிரிவு தடை செய்கிறது.
வங்கிகள், நிதி நிறுவனங்கள் அல்லது தனிநபர்கள், பணம் வைத்து விளையாடும் ஆன்லைன் நிறுவனங்களுக்கு நிதி பரிவர்த்தனை செய்வது, பிரிவு 7ன் கீழ் தடை செய்யப்படுகிறது.
இந்த மாதிரி விதிமுறைகள் மீது, இந்த மாதம் 31ம் தேதிக்குள் தங்கள் கருத்தை பொதுமக்கள் தெரிவிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.