வீட்டு உபயோக பொருட்கள் தயாரிப்பு; அரசின் ஊக்குவிப்பு திட்டம் நீட்டிப்பு
வீட்டு உபயோக பொருட்கள் தயாரிப்பு; அரசின் ஊக்குவிப்பு திட்டம் நீட்டிப்பு
UPDATED : அக் 19, 2025 08:42 AM
ADDED : அக் 19, 2025 02:56 AM

புதுடில்லி: ஏ.சி., எல்.இ.டி., விளக்குகள் உள்ளிட்ட வீட்டு உபயோக பொருட்களுக்கான பி.எல்.ஐ., திட்டத்தின் கீழ் விண்ணப்பிப்பதற்கான கால அவகாசத்தை, அடுத்த மாதம் 10ம் தேதி வரை நீட்டிப்பதாக மத்திய அரசு அறிவித்து உள்ளது.
இது தொடர்பாக, தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தக மேம்பாட்டு துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளதாவது: வீட்டு உபயோகப் பொருட்களுக்கான நான்காவது சுற்று உற்பத்தி சார் ஊக்குவிப்பு திட்டத்தின் கீழ் விண்ணப்பிப்பதற்கான காலக்கெடு வரும் நவம்பர் 10ம் தேதி வரை நீட்டிக்கப்படுகிறது.
கடந்த மாதம் 15ம் தேதி துவங்கிய விண்ணப்ப காலம், இம்மாதம் 14ம் தேதியுடன் முடிவடைந்தது. தொழில்துறையினரின் அதீத ஆர்வம் காரணமாக காலக்கெடுவை நீட்டிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. ஏ.சி., எல்.இ.டி., விளக்குகளின் முக்கிய உதிரிபாகங்களை உள்நாட்டில் உற்பத்தி செய்வது தொடர்பாக நிறுவனங்களின் நம்பிக்கை அதிகரித்துள்ளதை இது பிரதிபலிக்கிறது.
தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் https://pliwg.dpiit.gov.in என்ற ஆன்லைன் பி.எல்.ஐ., போர்ட்டலை பயன்படுத்தி, 'வைட் கூட்ஸ்' பிரிவில் தங்களது விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம்.
இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. 'வைட் கூட்ஸ்' எனும் வீட்டு உபயோகப் பொருட்களுக்கான உற்பத்தி சார் ஊக்குவிப்பு திட்டம் கடந்த 2021 ஏப்ரல் மாதம் அறிமுகப்படுத்தப்பட்டது.
இத்திட்டத்தின் கீழ் உள்நாட்டில் உதிரிபாகங்கள் தயாரிக்க முன்வரும் நிறுவனங்களுக்கு ஊக்கத்தொகை வழங்க 6,238 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுஉள்ளது. வரும் 2028 - 29ம் நிதியாண்டு வரை இத்திட்டம் செயல்படுத்தப் படுகிறது.
உற்பத்தி சார் ஊக்குவிப்பு திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க, காலக்கெடு வரும் நவம்பர் 10 வரை நீட்டிப்பு https://pliwg.dpiit.gov.in என்ற போர்ட்டலை பயன்படுத்தி, 'வைட் கூட்ஸ்' பிரிவில் விண்ணப்பிக்கலாம்