ஆர்வம் காட்டாத மாநிலங்கள் ரத்தாகும் பசுமை மின் திட்டங்கள் கொள்முதல் ஒப்பந்தம் ஏற்படாதது காரணம்
ஆர்வம் காட்டாத மாநிலங்கள் ரத்தாகும் பசுமை மின் திட்டங்கள் கொள்முதல் ஒப்பந்தம் ஏற்படாதது காரணம்
ADDED : நவ 05, 2025 01:01 AM

புதுடில்லி: மத்திய அரசு 42 ஜிகாவாட் திறன் கொண்ட பசுமை மின்சார திட்டங்களை ரத்து செய்ய ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இது நாட்டின் மொத்த புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திறனில் கிட்டத்தட்ட 20 சதவீதமாகும். மாநில மின்சார வாரியங்களுடன் மின்சாரத்தை கொள்முதல் செய்வதற்கான ஒப்பந்தங்கள் இறுதி செய்யப்படாததால், இந்த முடிவு எடுக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
மாநில மின்சார வாரியங்கள் நிதி சிக்கல்கள் மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தியின் சீரற்ற தன்மை காரணமாக மின்சாரத்தை வாங்க தயங்குகின்றன. உற்பத்தியாளர்கள் பேட்டரி சேமிப்பு வசதிகளை உருவாக்க அரசு வலியுறுத்தியுள்ளது.
மேலும், மாநிலங்களுக்கு இடையேயான மின்சார பரிமாற்றத்திற்கான மானியங்களை மத்திய அரசு படிப்படியாக குறைத்து வருகிறது. வரும் 2028 ஜூன் மாதத்துக்கு பின், இதை முற்றிலுமாக நிறுத்த மத்திய மின்சார ஒழுங்குமுறை ஆணையம் திட்டமிட்டுள்ளது. இதனால், பிற மாநிலங்களிலிருந்து மின்சாரத்தை வாங்குவதற்கு மின் வாரியங்கள் தயக்கம் காட்டுகி ன்றன.
இத்திட்டங்கள் ரத்தானால் நாட்டின் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தி இலக்கிற்கு பெரும் பின்னடைவாக அமையும் என நிபுணர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

