UPDATED : அக் 11, 2026 12:00 AM
ADDED : அக் 10, 2026 10:46 PM

சென்னை: ‘வறட்சியால் நிலக்கடலை விவசாயம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் கடந்த மாதம் மூட்டை (80 கிலோ) 9,500 ரூபாயாக இருந்த நிலக்கடலை பருப்பு விலை, 30 சதவீதம் அதிகரித்து தற்போது 12 ஆயிரத்து 400 ரூபாயாக உள்ளது’ என கடலைமிட்டாய் உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து கோவில்பட்டி கடலைமிட்டாய் உற்பத்தியாளர் மற்றும் விற்பனையாளர் சங்க செயலர் கண்ணன் கூறியதாவது:
மேற்காசிய போருக்கு பின் கடலை மிட்டாய்க்கான ஏற்றுமதி வாய்ப்புகள் அதிகரித்து வருகின்றன. அதேநேரம் பண்டிகை கால தேவையால் கடலைமிட்டாய் உற்பத்தி வேகமெடுத்து வருகிறது. ஏற்கனவே பேக்கேஜிங் பொருட்களின் விலை உயர்வால் உற்பத்தி செலவு கூடியுள்ளது. தற்போது நிலக்கடலை பருப்பின் விலையும் உயர்ந்துள்ளது.
கடலைமிட்டாய் உற்பத்திக்கு நிலக்கடலை பருப்பு முக்கியமான மூலப்பொருள். போதுமான மழை பெய்யாததால் நிலக்கடலை விவசாயம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் வரத்தும் குறைந்துவிட்டது. நிலக்கடலை விவசாயத்தை ஊக்குவிக்க அரசு உதவி வருகிறது. இருப்பினும், கடலைமிட்டாய் தயாரிப்பின் தேவையை முழுமையாக பூர்த்தி செய்யும் வகையில் நிலக்கடலை உற்பத்தியை பெருக்க வேண்டும். அதேபோல் தற்போதைய விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
