ஜி.எஸ்.டி., வசூல் வளர்ச்சி வரி குறைப்பால் அக்டோபரில் சரிவு
ஜி.எஸ்.டி., வசூல் வளர்ச்சி வரி குறைப்பால் அக்டோபரில் சரிவு
ADDED : நவ 02, 2025 12:29 AM

புதுடில்லி: கடந்த அக்டோபர் மாத ஜி.எஸ்.டி., வசூல் 4.60 சதவீதம் வளர்ச்சியடைந்து 1.96 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது. இதுவே நடப்பு நிதியாண்டில் மிகக் குறைந்த ஜி.எஸ்.டி., வசூல் வளர்ச்சியாகும்.
கடந்த செப்டம்பர் 22ம் தேதி மாற்றியமைக்கப்பட்ட ஜி.எஸ்.டி., நடைமுறைக்கு வந்தது. செப்டம்பரில் 9 நாட்கள் மட்டுமே ஜி.எஸ்.டி., வரி குறைப்பு நடைமுறையில் இருந்த நிலையில், கடந்த மாத தரவுகளைக் கொண்டு தான், முழு தாக்கம் குறித்து அறிந்துகொள்ள முடியும்.
இதன்படி, கடந்தாண்டு அக்டோபரில் 1.87 லட்சம் கோடி ரூபாயாக இருந்த ஜி.எஸ்.டி., வசூல் நடப்பாண்டு அக்டோபரில் 1.96 லட்சம் கோடி ரூபாயாக சிறிய வளர்ச்சி கண்டுள்ளது. கடந்த செப்., 22ல் இருந்து ஜி.எஸ்.டி., குறைப்பு செய்யப்பட்டதால், வசூல் வளர்ச்சி சரிவு கண்டுள்ளது.
உள்நாட்டு விற்பனை நிலவரத்தை உணர்த்தும் மொத்த உள்நாட்டு வருவாய், வெறும் இரண்டு சதவீதம் மட்டுமே அதிகரித்து 1.45 லட்சம் கோடி ரூபாயாகியுள்ளது. இறக்குமதி செய்யப்பட்ட பொருட்களிலிருந்து கிடைத்த வருவாய், 13 சதவீதம் அதிகரித்து 50,884 கோடி ரூபாயாகியுள்ளது.
கடந்த மாதத்துக்கு முன்னதாக, நடப்பு நிதியாண்டின் ஏப்ரல் - செப்டம்பர் காலகட்டத்தில் சராசரி ஜி.எஸ்.டி., வசூல் வளர்ச்சி கிட்டத்தட்ட 9 சதவீதமாக இருந்தது. இதனிடையே, அக்டோபரில் தமிழகத்தின் ஜி.எஸ்.டி., வசூலும் நான்கு சதவீதம் அதிகரித்து 11,588 கோடி ரூபாயாக இருந்தது.

