ADDED : ஜன 05, 2024 11:53 PM

மும்பை:பொதுத்துறை நிறுவனமான எச்.ஏ.எல்., எனும் 'ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ்' நிறுவனத்தின் சந்தை மதிப்பு நேற்று 2 லட்சம் கோடி ரூபாயை எட்டியது.
இதன் வாயிலாக, 2 லட்சம் கோடி ரூபாய் சந்தை மதிப்பை எட்டிய ஏழாவது பொதுத்துறை நிறுவனமானது, ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ். நேற்று, வர்த்தக நேரத்தின் இடையே நிறுவனத்தின் பங்கு விலை 4.56 சதவீதம் வரை அதிகரித்து, ஓர் ஆண்டு காணாத உச்சமாக, 3,068 ரூபாயாக இருந்தது.
எனினும், வர்த்தக நேரத்தின் முடிவில் பங்கு ஒன்றின் விலை 3,000 ரூபாயாக குறைந்தது.கடந்த ஐந்து ஆண்டுகளில், இந்நிறுவன பங்குகளின் விலை 680 சதவீதத்துக்கும் மேலாக அதிகரித்துள்ளது.
கடந்த ஓர் ஆண்டில் 145 சதவீதம் அதிகரித்துஉள்ள இப்பங்கின் விலை, கடந்த மாதத்தில் மட்டும் 20 சதவீதம் அதிகரித்துஉள்ளது.
உலகின் மிகப் பழமையான மற்றும் மிகப்பெரிய விண்வெளி மற்றும் பாதுகாப்பு உற்பத்தியாளர்களில் ஒன்றான ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனம், கடந்த 1940ம் ஆண்டு துவங்கப்பட்டது.
இது, மத்திய பாதுகாப்பு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கி வருகிறது.