sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 29, 2025 ,ஐப்பசி 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

வர்த்தகம்

/

பொது

/

தலைவலி தரும் காபி விலை 50 ஆண்டுகளில் இல்லாத உயர்வு

/

தலைவலி தரும் காபி விலை 50 ஆண்டுகளில் இல்லாத உயர்வு

தலைவலி தரும் காபி விலை 50 ஆண்டுகளில் இல்லாத உயர்வு

தலைவலி தரும் காபி விலை 50 ஆண்டுகளில் இல்லாத உயர்வு

1


ADDED : டிச 09, 2024 01:07 AM

Google News

ADDED : டிச 09, 2024 01:07 AM

1


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி:கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத வகையில் காபியின் விலை அதிகரித்துள்ளது என்ற செய்தி, காலையில் நாளேடுடன் காபியை ருசிப்பவர்களுக்கு, சற்று தலைவலியானது தான்.

உலக காபி சந்தையில் ஆதிக்கம் செலுத்தும் பிரேசில், வியட்நாம் நாடுகளில் காலநிலை மாற்றம், பருவம் தவறிய மழை போன்ற காரணங்களால், காபி பயிர் மகசூல் ஆண்டுதோறும் பாதிப்பை சந்திக்கிறது. இதனால், கடந்த 50 ஆண்டுகளில், மிக அதிகபட்ச விலை உயர்வை காபி சந்தித்துள்ளது.

காபி கொட்டை கொள்முதலில் 'நெஸ்லே' போன்ற பெருநிறுவனங்களின் அதிக அளவு கொள்முதல் போட்டி, இடைத்தரகர்களின் முன்பேர வணிகம் ஆகியவையும், காபி சந்தையில் விலை உயர்வை ஏற்படுத்தக் காரணமாகின்றன.

இதற்கு முன் 1977ல், பிரேசிலின் காபி தோட்டங்களை பெரும் பனிப்பொழிவு கருகச் செய்த நிலையில், காபி விலை அதிகபட்ச உயர்வைக் கண்டது. பணவீக்க அடிப்படையில், கிட்டத்தட்ட 50 ஆண்டுகளுக்கு முந்தைய அதே விகிதத்தில் விலை உயர்வை, தற்போது காபி எட்டியுள்ளது.

அடுத்த ஓராண்டிலும் காபி விளைச்சல் குறையக்கூடும் என்ற நிபுணர்களின் கணிப்பு, மேலும் விலையை அதிகரிக்கச் செய்ய வாய்ப்புள்ளது.

முன்னிலை


'அராபிகா, ரோபஸ்டா' என்ற இரண்டு முக்கிய காபி கொட்டை ரகங்களில், அராபிகா உற்பத்தியில், உலகின் பாதியை பிரேசில் கொண்டிருக்கிறது. ரோபஸ்டா காபி கொட்டை உற்பத்தியில், வியட்நாம் 40 சதவீத பங்கு வகிக்கிறது.

அராபிகா காபி கொட்டைகள் வறுக்கப்பட்டு, அரைத்து பில்டர் காபியாக பெருமளவு பயன்படுத்தக்கூடிய நிலையில், வியட்நாமின் ரோபஸ்டா காபி கொட்டை ரகம், உடனடி காபியான 'இன்ஸ்டன்ட்' காபி தயாரிக்க பெருமளவு பயன்படுத்தப்படுகிறது.

அடுத்த ஓராண்டில், பிரேசிலில் அராபிகா ரக காபி உற்பத்தி, 10.50 சதவீதம் வீழ்ச்சி காணும் என கணிக்கப்பட்டுள்ளது. வியட்நாமிலும் ரோபஸ்டா காபி பயிர், செப்டம்பர் 2025 உடன் முடியவுள்ள சாகுபடி ஆண்டில், 10 சதவீத சரிவைக் காணும் எனத் தெரிகிறது.

ஜாக்பாட்


உற்பத்தி குறைவால், உலக நாடுகளில் காபி கொட்டை வினியோகம் பாதிக்கப்பட்டு, காபி விலை மேலும் உயர வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

அதேநேரம், காபி கொட்டை விலை உயர்வால், அதை பயிரிடும் விவசாயிகளுக்கு கொள்முதல் விலை உயர்ந்து, நல்ல விலை கிடைத்து வருவது மறுபுறம் சாதகமான அம்சம்.

உயர்தர காபிக்கு பெயர் பெற்ற நெஸ்லே நிறுவனம், இந்த விலை உயர்வால், மற்ற நாடுகளின் குறைந்த விலை காபி பிராண்டுகளுடன் போட்டியில் சரிவு கண்டு விட்டது. இதனால், அதன் வாடிக்கையாளர்களும் குறைந்த விலை காபி ரகங்களுக்கு மாற வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

விலை உயர்வு


கடந்த அக்டோபரில், இந்தியாவில் காபி துாள் விலை, கிலோவுக்கு 100 ரூபாய் வரை, இந்திய காபி வர்த்தக சங்கத்தால் உயர்த்தப்பட்டது. இதனால், ஹோட்டல்கள், காபி ஷாப்களில் ஒரு கப் காபி விலை சட்டென அதிகரிக்கப்பட்டு விட்டது.

அராபிகா, ரோபஸ்டா காபி ரகங்களின் விலை, இதுவரை இல்லாத உயர்வு கண்டுள்ளதால், அவற்றின் இறக்குமதி செலவு அதிகரித்து, உள்நாட்டில் காபி விலையை உயர்த்துவது தவிர்க்க முடியாததாகி விட்டது என, அந்த சங்கம் தெரிவித்தது.

இந்தியாவில் சராசரியாக ஆண்டுக்கு 3.50 லட்சம் டன் காபி உற்பத்தி செய்யப்படும் நிலையில், அதில் 70 சதவீதம் ரோபஸ்டா வகையைச் சேர்ந்தது. காலநிலை மாற்றத்தால், நம்நாட்டிலும் காபி உற்பத்தி 20 சதவீதம் குறைந்துள்ளது.

உலக நாடுகளில் காபிக்கு அதிக தேவை உள்ளதாலும், அதிக விலை கிடைப்பதாலும், ஏற்றுமதி செய்யப்படுகிறது. கிட்டத்தட்ட ஒரு லட்சம் டன் வரை உள்நாட்டில் பருகப்படுகிறது.

கலப்படக்காரர்கள் குஷி


உலக சந்தையில் காபி விலை அதிகரிக்கும் போதெல்லாம், உள்நாட்டிலும் காபி விலை உயர்த்தப்படுகிறது. கடந்த மூன்று ஆண்டுகளில், காபி விலை 40 முதல் 50 சதவீத உயர்வு கண்டிருக்கிறது.

உற்பத்தி அதிகரித்தால் மட்டுமே விலை உயர்வு கட்டுப்படும் என்றும்; அதுவரை விலை உயர்வை தவிர்க்க இயலாது என்றும் காபி வாரியத் தரப்பில் கூறப்படுகிறது.

காபி விலை அதிகரித்தாலும், காபி பிரியர்களால் அதை வாங்கவும் முடியாமல், பழக்கத்தை விடவும் முடியாமல் தவிப்பது, கலப்படக்காரர்களை கவர்ந்திருக்கிறது. அதன் விளைவாக, தற்போது குறைந்த விலையில் விற்கப்படும் காபி ரகங்கள் அனைத்திலும் கலப்படம் நீக்கமற நிறைந்திருக்கிறது.

காபியில் அதிகபட்சமாக 49 சதவீதம் வரை சிக்கிரி கலக்க, உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் அனுமதித்துள்ளது.

ஆனால், விலை உயர்வால், விலை குறைந்த காபி ரகங்களுக்கு அடித்துள்ள ஜாக்பாட் தேவையை பயன்படுத்தி, காபியின் நிறம் கூட்ட சிக்கிரி பயன்படுத்தும் நிலை மாறி, சிக்கிரியில் சிறிதளவு காபித்துாளை கலக்குமளவு கலப்படம் கொடிகட்டிப் பறக்கிறது.

இது உடல்நலனுக்கு தீங்கு என சுகாதாரத் துறையினர் எச்சரிக்கின்றனர்.

பதிவு செய்யாதவை


தென்னிந்தியாவில் காபி வறுக்கும் 500 நிறுவனங்கள் உள்ள நிலையில், அவற்றில் 300 நிறுவனங்கள் கர்நாடகாவில் பதிவு செய்யப்பட்டவை.

அதோடு, பதிவு செய்யப்பட்ட 3,000 காபி விற்பனை மையங்களும் உள்ளன. பதிவு செய்யப்படாத நிறுவனங்கள் புற்றீசலாக, தரமற்ற காபியை சந்தைப்படுத்துவதாக, இந்திய காபி வர்த்தக சங்கம் எச்சரித்துள்ளது.

கடந்த ஓராண்டில் மட்டும் இந்தியாவில் காபி விலை 32.23 சதவீதம் அதிகரித்துள்ளதாக 'டிரேடிங் எகனாமிக்ஸ்' என்ற இணையதள புள்ளிவிபரம் தெரிவிக்கிறது.

தலைவலி தீர காபி அருந்துவது பலரது வழக்கம் என்ற நிலையில், வருகிற புத்தாண்டில், காபி விலையே பெரும் தலைவலியை ஏற்படுத்தும் போல தெரிகிறது.






      Dinamalar
      Follow us