ஆதரவற்றோருக்கு உதவுங்கள்... அள்ளிக் கொடுப்பதில் மகிழுங்கள்!
ஆதரவற்றோருக்கு உதவுங்கள்... அள்ளிக் கொடுப்பதில் மகிழுங்கள்!
UPDATED : அக் 19, 2026 12:00 AM
ADDED : அக் 18, 2026 04:35 AM
பு த்தாடை, பட்டாசு, பலகாரம் என தீபாவளி கொண்டாட்டத்தை திட்டமிடும் நாம், ஆதரவற்றோருக்கும் உதவிக்கரம் நீட்டலாமே என்கிறார், தி யுனைடெட் ஆதரவற்றோர் இல்ல நிர்வாகி ராதாகிருஷ்ணன். ‘இந்த உலகம் அனைவருக்கும் பொதுவானது. மக்கள் வசிக்கும் வரை யாரும் ஆதரவற்றவர்கள் கிடையாது’ என்ற நோக்கத்தில், 1992ல், 110 மாற்றுத்திறனாளிகளை அரவணைத்து துவக்கப்பட்டதே தி யுனைடெட் ஆதரவற்றோர் இல்லம். கோவை, 96, சத்தி ரோடு, குரும்பபாளையத்தில் செயல்பட்டு வரும் இவ்வில்லம், சிறந்த சேவைக்கான மத்திய, மாநில அரசுகளின் விருதுகளை பெற்றுள்ளது.
இல்ல நிர்வாகி ராதாகிருஷ்ணன் கூறியதாவது:
மாற்றுத்திறனாளிகள் மட்டுமின்றி, மனநலம் பாதிக்கப்பட்ட ஆதரவற்ற எளியவர்களுக்கும் இவ்வில்லம் ஆதரவளித்து வருகிறது.இங்கு தங்கியிருப்போருடன் தங்களின் மகிழ்ச்சியான தருணங்களான பிறந்த நாள், திருமண நாள், மூதாதையர் நினைவு நாள் மற்றும் விழாக்கள், பண்டிகைகளை பகிர்ந்து கொள்ளலாம். ஒரு நாள் உணவு வழங்கி, உங்களின் மகிழ்ச்சியை இவர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம். ஆதரவற்றோருக்கு செய்யும் உதவி, ஆண்டவனுக்கு செய்யும் தொண்டாகும்.
இங்குள்ளோருக்கு ஒருநாள் உணவு வழங்குவதற்கான செலவு ரூ.7,500. உங்களின் வசதிக்கேற்ப இத்தொகையில் பங்கெடுத்து கொள்ளலாம். இங்கு பணிபுரியும் பணியாளர்கள் அனைவரும் சேவை மனப்பான்மையுடனும், மிகுந்த பொறுமையுடனும் பணியாற்றி வருகின்றனர். அவர்களின் ஒத்துழைப்பால்தான் ஆதரவற்றோருக்கு எந்த குறையும் இல்லாமல் கவனித்து கொள்ள முடிகிறது என்றார்.ஆதரவற்றோருக்கு உதவ விரும்புவோர் 99655 09313 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
