அதிக வளர்ச்சி, குறைந்த பணவீக்கம்: இந்தியாவின் தனி மாடல்
அதிக வளர்ச்சி, குறைந்த பணவீக்கம்: இந்தியாவின் தனி மாடல்
UPDATED : டிச 08, 2025 12:35 AM
ADDED : டிச 08, 2025 12:32 AM

மந்தநிலை, அதிக பணவீக்கம் மற்றும் அடிப்படை கட்டமைப்பில் உள்ள சிக்கல்களால், உலகின் வளர்ந்த நாடுகள் போராடிக் கொண்டிருக்கின்றன. ஆனால், இந்தியாவோ, பொருளாதார வல்லுநர்களே எதிர்பார்க்காத ஒரு அதிசய முன்னேற்றத்தை அடைந்து காட்டியுள்ளது. மிக குறைந்த பணவீக்கத்துக்கு இடையே, கடந்த ஜூலை - செப்., காலாண்டில், இந்தியா 8.20 சதவீத வளர்ச்சியை பதிவு செய்துள்ளது; இது மிகப்பெரிய வளர்ச்சி. கடந்த பல ஆண்டுகளாகவே, 6 - 8 சதவீதம் இடையே நீடிக்கும் வளர்ச்சி விகிதத்தை எந்த பெரிய பொருளாதாரமும் தற்போது வரை காட்டவில்லை.
![]() |
அமெரிக்காவின் ஜி.டி.பி., மந்தமாகி வருகிறது; சீனாவின் பொருளாதார மாடல் அழுத்தத்தில் உள்ளது; ஐரோப்பாவோ தேக்க நிலையில், ஆனால் இந்தியா தொடர்ந்து அதிக வளர்ச்சியையும், அதே நேரத்தில் 4 - 5 சதவீதத்துக்குள் பணவீக்கத்தையும் ஒரே நேரத்தில் தக்க வைத்து வந்திருக்கிறது.
நடப்பாண்டு பல மாதங்களில் சில்லரை விலை பணவீக்கம் மூன்று சதவீதத்துக்கு கீழே பதிவானது. கடந்த அக்டோபர் மாத பணவீக்கம் 0.25 சதவீதம் என்ற மிகக் குறைந்த நிலைக்கு சென்றது.
நவீன இந்தியா பார்த்திராத மிகக் குறைந்த அளவு இது என்ற நிலையில், மொத்த விலை பணவீக்கம், கிட்டத்தட்ட பூஜ்யத்துக்கு கீழே இருப்பது, புதிய பொருளாதார சமநிலையை காட்டுகிறது.
இந்தியாவின் வினியோக திறன், அதன் தேவையைவிட அதிவேகமாக வளர்ந்துள்ளது. உள்கட்டமைப்பு குறைபாடு, மின் உற்பத்தி பலவீனம், உணவு வழங்கலில் ஏற்படும் சிக்கல்கள் போன்ற காரணங்களால் பெரும்பாலான வளர்ந்து வரும் நாடுகள், தேவை குறைவு, அதிக பணவீக்கம் என்ற சுழற்சியில் சிக்கி கொள்வது வழக்கம்.
ஆனால், இந்தியா கடந்த பத்தாண்டுகளில் இந்த தடைகளை உடைத்தெறிந்து விட்டது.
மக்கள் தொகை நன்மை
சீனா, கொரியா, ஜப்பான் ஆகியவை வேகமான வளர்ச்சி கண்ட காலத்தில் எதிர்கொண்ட தொழிலாளர் தட்டுப்பாடு, இந்தியாவுக்கு இல்லாதது அதன் அதிர்ஷ்டம் எனலாம். தொடர்ந்து அதிகரித்து வரும், உழைக்கும் வயதினரால், தொழிலாளர் எண்ணிக்கை, நாட்டின் வளர்ச்சிக்கு சாதகமாக அமைகிறது.
அதிக தேவை
தனியார் துறையில் நுகர்வு சீரானதாக உள்ளது; கடன் வளர்ச்சி கட்டுப்பாட்டில் இருக்கிறது; ஆரோக்கியமான நிலையில் தான் ரியல் எஸ்டேட் வளர்ச்சியும் தொடர்கிறது. அரசின் மூலதன செலவினம், தேவையையும் உற்பத்தி திறனையும் ஒரே நேரத்தில் உயர்த்துகிறது.
பணவீக்கம் தற்போது கட்டமைப்பு ரீதியாக நிலை நிறுத்தப்பட்டுள்ளது. உற்பத்தி திறன் அதிகரிப்பு, சிறந்த வினியோக திறன், மேம்பட்ட நலத்திட்ட வழங்கல்கள் ஆகியவை மொத்த விலை பணவீக்கத்தை கட்டுப்படுத்துகின்றனவே தவிர, ரிசர்வ் வங்கியின் பணக்கொள்கை அல்ல.
வலுவான துறைகள்
கிட்டத்தட்ட 62 லட்சம் கோடி ரூபாய் அன்னிய செலாவணி கையிருப்பு, 34.80 லட்சம் கோடி ரூபாய் சேவை ஏற்றுமதி, குறைந்துள்ள வெளிநாட்டு கடன், இவை அனைத்தும் 2013 காலகட்டத்திலிருந்த அபாயங்களை முற்றிலும் மாற்றியமைத்துள்ளன. ரூபாய் மீது அழுத்தம் இருந்தாலும், அது பணவீக்கத்தையோ, நிதி நிலைத்தன்மையையோ பாதிக்கவில்லை.
சீனாவின் வளர்ச்சி, அதிக கடன் தேவைப்படும் தயாரிப்பு துறையை மையப்படுத்தி இருந்தது. தென் கொரியாவின் வளர்ச்சி தொழில்துறையின் ஏற்றுமதியை சார்ந்திருந்தது. ஜப்பானின் வளர்ச்சி உலகப் போருக்கு பிந்தைய தனித்துவமான சூழலில் எட்டப்பட்டது.
ஆனால் இந்தியா, சேவைத்துறை, டிஜிட்டல் உள்கட்டமைப்பு, நிதிக்கட்டுப்பாடு, மக்கள்தொகை நன்மை ஆகியவற்றின் கலவையை ஜனநாயக சூழலுடன் செயல்படுத்துகிறது. உலகின் பெரிய பொருளாதாரங்களில் காணாத தனி மாடல் இது.
வாய்ப்பு
எட்டு சதவீதத்துக்கு மேல் வளர்ச்சியை பல ஆண்டுகள் நிலைநிறுத்தக்கூடிய திறன் இந்தியாவுக்கு உள்ளது.
இது 2030க்குள் 630 லட்சம் கோடி ரூபாய் பொருளாதாரமாக மாறும் வாய்ப்பை உறுதிப்படுத்துகிறது. இது சாதாரண, காற்றின் போக்கிலான சுழற்சி போன்ற வளர்ச்சி அல்ல.
சீர்குலையாத பத்து ஆண்டுகால சீர்திருத்தத்தின் பலன். இந்த நேரத்தை சரியாக பயன்படுத்தினால், இந்தியா ஒரு புதிய அத்தியாயத்தை எதிர்காலத்துக்கென எழுத முடியும்.
இந்திய பொருளாதார அதிசயம் தற்போது நடந்திருக்கிறது. அதன் தாக்கம் மற்றும் எதிர்கால வாய்ப்பு ஆகியவை வரலாற்று முக்கியத்துவமாக மாறும் என்பது சர்வதேச நிதி நிபுணர்களின் கணிப்பு.


