குப்பத்தில் திறன் பயிற்சி மையம் 'ஹிண்டால்கோ' நிறுவனம் துவக்கம்
குப்பத்தில் திறன் பயிற்சி மையம் 'ஹிண்டால்கோ' நிறுவனம் துவக்கம்
ADDED : பிப் 01, 2026 02:02 AM

குப்பம்: 'ஹிண்டால்கோ' நிறுவனம், 'கடா' எனும் குப்பம் பகுதி மேம்பாட்டு அமைப்புடன் இணைந்து, ஆந்திர மாநிலம் குப்பத்தில் பல்துறை பயிற்சி மையத்தை துவங்கியுள்ளது.
இதை, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு திறந்து வைத்தார். இப்பயிற்சி மையத்தில் ஆண்டுக்கு 500 பேர் பயிற்சி பெற முடியும். தொழில் துறையுடன் இணைந்த, வேலைவாய்ப்புக்கான திறன்களை உள்ளடக்கிய பயிற்சிகள் இங்கு வழங்கப்படும்.
'ஸ்வர்ண குப்பம் 2029' என்ற திட்டத்தின் இலக்குகளை அடையும் நோக்கத்துடன், இந்த தனியார் - அரசு கூட்டு மையம் உருவாக்கப்பட்டுள்ளது.
மொத்தம் 22,500 சதுர அடி பரப்பில் அமைக்கப்பட்டுள்ள இப்பயிற்சி மையத்தில் ஸ்மார்ட் வகுப்பறைகள், துறைசார்ந்த செய்முறை ஆய்வகங்கள், டிஜிட்டல் கற்றலுக்கான ஆய்வகங்கள், வேலைவாய்ப்பு ஆலோசனை அமைப்புகள் ஆகியவை இடம்பெறும்.
இங்கு, தெலுங்கு, குஜராத்தி, ஒடியா ஆகிய மொழிகளில் பயிற்சி வழங்கப்பட இருக்கிறது. ஏற்கனவே ஹிண்டால்கோ நிறுவனத்தின் உதவியுடன் குஜராத், ஒடிஷாவில் இயங்கிவரும் மையங்களைப் போலவே இது செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
'பிலிப்ஸ் லேர்னிங், மேக்ஸ் ஹெல்த்கேர், ஸ்கில்சானிக்ஸ், இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் வெல்டிங், ப்ரோனிஸ், சீபெரி, நாஸ்காம்' உள்ளிட்ட நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்யப்பட்டு, அவற்றின் ஆதரவுடன் புதிய மையம் செயல்படும்.
ஏ.ஐ., டேட்டா அனலிடிக்ஸ், இணைய பாதுகாப்பு போன்ற பயிற்சிகளுக்கான சான்றிதழ்களை நாஸ்காம் வழங்க இருக்கிறது.

