உங்கள் தரவுகள் தவறாக பயன்படுத்தப்படுவதை தடுப்பது எப்படி?
உங்கள் தரவுகள் தவறாக பயன்படுத்தப்படுவதை தடுப்பது எப்படி?
ADDED : டிச 29, 2024 10:03 PM

இணையத்தில் பல்வேறு வகையான சைபர் குற்றங்கள் நடைபெறுவதால், இணைய பரிவர்த்தனைகளின் போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும். பல்வேறு வகைகளில் சைபர் குற்றவாளிகள் வலைவீசி வரும் நிலையில், தனிநபர்களின் பான் கார்டு, ஆதார் எண் போன்றவற்றை திருடி மோசடி செய்வதும் அதிகரித்துள்ளது.
அண்மையில், நன்கறியப்பட்ட நடிகையான சன்னி லியோன் பெயரில், சத்தீஸ்கர் மாநிலத்தில் மோசடி நபர் ஒருவர் அரசு உதவி பெற்ற சம்பவம், பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இத்தகைய மோசடிகளுக்கு ஆளாகாமல், தரவுகளை பாதுகாக்கும் வழிகளை அறிந்திருப்பது அவசியம்.
ஆதார் பூட்டு;
இந்தியாவில் ஆதார் எண் தான் முக்கிய அடையாளமாக விளங்குகிறது. விஷமிகள் இதை தவறாக பயன்படுத்தும் அபாயம் இருக்கிறது. ஆதார் எண் தவறாக பயன்படுத்தப்படுவதை தவிர்க்க, ஆன்லைன் மூலம் இந்த எண்ணை லாக் செய்துவைக்கலாம். லாக் செய்தாலும், மெய்நிகர் ஆதார் அட்டையை நீங்கள் பயன்படுத்தலாம்.
இணைய வழி:
ஆதார் அதிகாரபூர்வ இணையதளம் வாயிலாக அவ்வப்போது நீங்கள் ஆதார் எண்ணை சரி பார்க்கலாம். இப்படி செய்யும் போது, சரி பார்த்தல் செயலாக்கம் தொடர்பாக 'இ - மெயில்' வரும். இதை நீங்கள் செய்யாமலேயே 'இ - மெயில்' வந்தால், உடனே இது தொடர்பாக
புகார் அளிக்க வேண்டும்.
மொபைல் போன் எண்:
உங்கள் பெயருக்கு எத்தனை மொபைல் போன் எண்கள் வழங்கப்பட்டுள்ளன என்பதை, டி.ஏ.எப்.சி.ஓ.பி., அமைப்பின் இணையதளம் வாயிலாக அறியலாம். இதில் போன் எண்ணை சமர்ப்பித்தவுடன், ஒரு முறை பாஸ்வேர்டு அனுப்பி வைக்கப்படும். உங்கள் பெயரின் கீழ், வேறு ஏதேனும் போன் எண்கள் வழங்கப்பட்டிருந்தால் கண்டறியலாம்.
கிரெடிட் அறிக்கை:
கிரெடிட் ஸ்கோர் கடன் பெறுவதற்கு முக்கியமானது என்பதோடு மற்ற விதங்களிலும் பயன்படக்கூடியது. உங்கள் கிரெடிட் அறிக்கையை தொடர்ந்து கவனித்து வரவும். செயலிகள் வாயிலாக இலவசமாகவும் அணுகலாம். உங்கள் பரிவர்த்தனைக்கு தொடர்பு இல்லாத பாதிப்பு ஏதேனும் இருந்தால் உடனே புகார் செய்யவும்.
உடனடி புகார்:
நிதி செயல்பாடுகளில் கவனமாக இருப்பது மிகவும் அவசியம். பரிவர்த்தனை மற்றும் வங்கி அறிக்கைகள் உள்ளிட்டவற்றை கவனமாக படிக்க வேண்டும். ஏதேனும் மோசடி நிகழ்ந்தால், உடனடியாக உரிய அமைப்புகளுக்கு புகார் செய்வதும் அவசியம். மோசடி பரிவர்த்தனைகளை ஸ்கிரீன் ஷாட் எடுத்து வைக்கவும்.