புழுக்களை கொல்லாமல் பட்டு உற்பத்தி வழியை உருவாக்கியது மும்பை ஐ.ஐ.டி.,
புழுக்களை கொல்லாமல் பட்டு உற்பத்தி வழியை உருவாக்கியது மும்பை ஐ.ஐ.டி.,
ADDED : பிப் 03, 2026 01:08 AM

புதுடில்லி: மும்பை ஐ.ஐ.டி., யின் கிராமப்புற பகுதிகளுக்கான தொழில்நுட்ப மாற்று மையம், பட்டுப்புழுக்களை கொல்லாமல் பட்டு உற்பத்தி செய்வற்கான முறையை உருவாக்கிஉள்ளது.
'கோல் இந்தியா' நிறுவனத்தின் சமூக பொறுப்பு பிரிவின் நிதிஉதவியுடன் மேற்கொள்ளப்பட்ட இந்த மூன்றாண்டு முன்னோட்ட திட்டத்துக்கு 'ஜீவோதயா' என்று பெயரிடப்பட்டுள்ளது.
பாரம்பரிய முறையில், பட்டுப்புழுக்கள் கூட்டை உருவாக்கிய பின், அவை கொதிக்கும் நீரில் மூழ்கடிக்கப்பட்டு கொல்லப்பட்டு, பட்டு பிரித்தெடுக்கப்படுகிறது. ஆனால், ஜீவோதயா முறையில், புழுக்கள் தங்களை சுற்றி கூடு அமைப்பதற்கு பதிலாக, சமதளத்தில் கூட்டை உருவாக்க, அவற்றுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது.
இதனால், அவற்றை கூட்டுக்குள் வைத்தே கொன்று பட்டை பிரித்தெடுக்க வேண்டிய அவசியம் இல்லாமல் போகிறது. அவை பட்டுப்பூச்சிகளாக பரிணாமம் பெறக்கூடும்.
கோல் இந்தியா நிறுவனத்தின் அறிக்கை:
மும்பை ஐ.ஐ.டி., யின் தனித்துவம் வாய்ந்த முன்னோடி திட்டமான ஜீவோதயா, மூன்றாண்டு தொடர் ஆராய்ச்சிக்கு பின் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை அடைந்துள்ளது.
இந்த திட்டத்தின் கருத்து நிலையில் துவங்கி செயல்பாட்டு நிலை வரை, மும்பை ஐ.ஐ.டி.,க்கு நிதி உதவி அளித்ததில் கோல் இந்தியா முக்கிய பங்காற்றிஉள்ளது.
இத்திட்டம், பட்டு உற்பத்திக்காக மிகப் பெரிய அளவில், விரிவாக பயன்படுத்தப்படும் கட்டத்தை அடைந்துள்ளது. இதன் வாயிலாக, பட்டு விவசாயிகளுக்கு நிலையான வருமானம் கிடைப்பதுடன், கிராமப்புற வாழ்வாதாரமும் மேம்படும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. - டில்லி சிறப்பு நிருபர் -

