UPDATED : மே 31, 2026 02:01 AM
ADDED : மே 31, 2026 01:38 AM

புதுடில்லி: ஜவுளித்துறை சார்ந்த பல்வேறு தரப்பினரிடமிருந்து வந்த கோரிக்கையை அடுத்து, பருத்தி மீதான இறக்குமதி வரியை மத்திய அரசு ரத்து செய்துள்ளது. இந்த வரி நீக்கம் ஜூன் 1ம் தேதி (நாளை) முதல் அமலுக்கு வர உள்ளது.
இது குறித்து மத்திய நிதியமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை:
ஜூன் 1ம் தேதி முதல் அக்., 31ம் தேதி வரை 5 மாதங்களுக்கு பருத்தி மீதான அனைத்து சுங்க வரிகளிலிருந்தும் விலக்கு அளிக்கப்படுகிறது. இந்த தற்காலிக வரி விலக்கு வாயிலாக ஜவுளித்துறைக்கு போதுமான பருத்தி கிடைக்கும்.
அதுபோல் ஜவுளி ஆயத்த ஆடை உற்பத்தியாளர்களின் செலவினங்கள் குறையும். நுகர்வோருக்கும் இதன் பலன் கிடைக்கும். நாட்டின் விவசாயிகளின் விருப்பத்தை மனதில் வைத்தே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இது ஜவுளித்துறையில் ஒரு நேர்மறையான விளைவுகளை ஏற்படுத்தும் என நம்பப்படுகிறது. குறிப்பாக சிறு மற்றும் நடுத்தர ஜவுளித்துறையினருக்கு சந்தையில் போதுமான பருத்தி கிடைப்பதை உறுதி செய்யும்.
இவ்வாறு தெரிவித்துள்ளது.
பருத்தி இறக்குமதி மீது இதுவரை 11 சதவீத வரி விதிக்கப்பட்டு வந்தது. இதனால், உள்நாட்டில் விலை உயர்வதாகவும் தேவைக்கேற்ப பருத்தி கிடைப்பதில் தடங்கல் ஏற்படுவதாகவும் ஜவுளித் துறையினர் தெரிவித்து வந்தனர். இந்நிலையில், முழு வரிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே, 'பருத்தி, பஞ்சு இறக்குமதிக்கான வரிவிலக்கால், ஜவுளி மற்றும் ஆடைத்துறைக்கு பஞ்சு தடையின்றி கிடைக்கும்' என, ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சிலான ஏ.இ.பி.சி., வரவேற்றுள்ளது.
ஆடைத்துறையின் உற்பத்தி செலவை இது குறைக்கும் என்றும் ஆடைத்துறைக்கு பஞ்சு தடையின்றி கிடைப்பதுடன் நுால் விலை உயர்வால் பாதிக்கப்பட்ட குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் இதனால் பயனடையும் என்றும் கவுன்சிலின் தலைவர் சக்திவேல் தெரிவித்தார்.
